பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.01.2020), ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரீசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆஸ்திரேலியாவில் நீண்ட நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக, உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தமது சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் பிரதமர் மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். இதுவரை காணாத அளவிற்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கைச் சீற்றத்தை துணிவுடன் எதிர்கொண்டுவரும் ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஆஸ்திரேலிய அரசுக்கும் இந்தியாவின் உறுதியான ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
அண்மைக் காலங்களில் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தமது மனநிறைவைத் தெரிவித்த பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது என்ற இந்தியாவின் வாக்குறுதியையும் உறுதிப்படுத்தினார். அந்த வகையில், அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருக்கும் ஆஸ்திரேலிய பிரதமரை வரவேற்பதை தாம் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும், இருதரப்புக்கும் உகந்த தேதியில் விரைவில் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
2020-ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலம் சிறப்பாக அமைய பிரதமர் மோரீசனுக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் பிரதமர் தமது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.