பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இன்று இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு போரிஸ் ஜான்சனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இரு தலைவர்களும் இந்தப் புதிய பத்தாண்டில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான நோக்க அடிப்படையிலான செயல் திட்ட ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இந்த இலக்கை அடைய விரிவான காலக்கெடு செயல் திட்டத்தை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
பருவநிலை மாற்றத்துறையில், குறிப்பாக பேரிடர் மீட்டெழுச்சி கட்டமைப்புக் கூட்டணி சார்ந்த துறையில் இந்தியா – இங்கிலாந்து இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்த ஆண்டு பிற்பகுதியில் கிளாஸ்கோவில் நடைபெறும் சி ஓ பி -26 எனப்படும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மாநாட்டில் பங்கேற்க தமக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்காக பிரதமர் மோடி, பிரதமர் ஜான்சனுக்கு நன்றி தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்று குறித்த கருத்துக்களையும் இரு பிரதமர்களும் பரிமாறிக் கொண்டனர். இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி நாடைன் டோரிஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த பிரதமர் திரு மோடி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.
பரஸ்பரம் ஏற்புடைய தேதிகளில் இந்தியாவுக்கு வருமாறு திரு ஜான்சனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை பிரதமர் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.