பிரதமர் திரு நரேந்திரமோடி, மேன்மை பொருந்திய சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் உடன் இன்று தொலைபேசியில் பேசினார்.
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சர்வதேச சவால்களை பற்றி இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஜி-20 குழுவுக்கு சவுதி அரேபியா அளித்து வரும் தலைமைத்துவத்துக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஜி-20 அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெருந்தொற்றை ஒன்றிணைந்து எதிர் கொள்வதற்கு உதவியாக இருந்ததாக தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். ஜி-20 தொடர்பான தற்போதைய முன்னுரிமைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்தியா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே நிலவும் இரு தரப்பு உறவு குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், அனைத்து துறைகளிலும் அதை மேலும் வலுப்படுத்த உறுதி ஏற்றனர். கொவிட்-19 பெருந்தொற்றின் போது சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு அளித்த ஆதரவுக்காக அரசருக்கு சிறப்பு நன்றியை பிரதமர் தெரிவித்தார்.
சவுதி அரேபிய அரசர், அரச குடும்பத்தின் இதர உறுப்பினர்கள், மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.