புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.01.2020), பூடான் மன்னர் திரு ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் திரு லியோன்சென் லோடேஷெரிங், இலங்கை அதிபர் திரு கோத்தபய ராஜபக்சே, பிரதமர் திரு மஹிந்த ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிஹ், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா மற்றும் நேபாள பிரதமர் திரு கே பி ஷர்மா ஒலி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த தலைவர்களுக்கு தமது சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்தார். “அண்டைநாடுகள் முதலில்” கொள்கையை பின்பற்றுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்த பிராந்தியத்தில் உள்ள இந்தியாவின் நட்பு நாடுகள் மற்றும் பங்குதாரர்கள் அனைவரும் அமைதி, பாதுகாப்பு, வளம் மற்றும் முன்னேற்றத்தை பெற வேண்டும் என்ற தொலைநோக்கு கொள்கையையும் வலியுறுத்தினார்.
பூடான் மன்னருடனான பேச்சு வார்த்தையின் போது, கடந்த ஆண்டில் இந்தியா-பூடான் இடையேயான சிறப்பு வாய்ந்த நட்புறவு மேலும் பலப்படுவதற்கு காரணமாd பல்வேறு முக்கிய சாதனைகளை சுட்டிக்காட்டினார். பூடானுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்த பிரதமர், அந்நாட்டு மக்கள் தம்மீது காட்டிய அன்பு மற்றம் பாசத்தையும் எடுத்துரைத்தார். இருநாடுகள் இடையே இளைஞர்களை பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பூடான் மன்னரின் இந்திய வருகையை தாம் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரின் வாழ்த்துக்கு பதில் வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர் திரு கோத்தபய ராஜபக்சே, இந்தியா-இலங்கை இடையேயான நட்பு ரீதியான உறவு 2020 ஆம் ஆண்டில் மேலும் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக மேலும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றுவது என்ற உறுதிப்பாட்டை இருதலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இலங்கை பிரதமர் திரு மஹிந்த ராஜபக்சேவுடன் பேசிய பிரதமர், இலங்கையுடனான நெருங்கிய மற்றும் விரிவான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்கு பதிலளித்த பிரதமர் திரு ராஜபக்சே, தமது அன்பான வாழ்த்துகளை தெரிவித்ததுடன் இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
மாலத்தீவு அதிபர் மற்றும் மாலத்தீவு மக்கள், அவர்களது வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளிலும் வெற்றியடையவும் பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அதிபர் சோலிஹ், பிரதமருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இந்தியாவுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்துவது என்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதுடன் புதிதாக இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ள துறைகளை அடையாளம் காண்பதன் மூலம், உறவை வலுப்படுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுடனான பேச்சுவார்த்தையின்போது, அவாமி லீக் கட்சியின் தலைவராக மேலும் 3 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையொட்டி, அவருக்கு தமது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவுக்கான பங்களாதேஷ் முன்னாள் தூதர் சையத் மவ்சம் அலியின் எதிர்பாரா மறைவுக்கும் பிரதமர் தமது இரங்கலை தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இந்தியா –பங்களாதேஷ் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பங்காபந்துவின் நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷ் விடுதலை அடைந்ததன் 50-வது ஆண்டுவிழா மற்றும் இருநாடுகள் இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவு பெறும் வேளையில், இந்தியா-பங்களாதேஷ் இடையேயான நெருங்கிய உறவை மேம்படுத்தவதே தமது அரசின் முன்னுரிமைப் பணி என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் ஒலி உடனான பேச்சு வார்தையின்போது, 2019-ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டதன் மூலம், இந்தியா-நேபாள நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தமது மனநிறைவை தெரிவித்தார். மோதிஹரி (இந்தியா)-அம்லேக்கஞ்ச் (நேபாளம்) இடையேயான பெட்ரோலியக் குழாய் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். நேபாளத்தில் நடைபெற்றுவரும் வீடுகள் மறுசீரமைப்பு பணிகளை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைப்பதோடு, பிராத் நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி வளாகத்தை விரைவில் தொடங்கி வைப்பது எனவும் இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.