ஸ்வீடன் பிரதமர் லோஃப்வென் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 16-17 ஏப்ரல் 2018 ஆகிய நாட்களில் அரசுமுறைப் பயணமாக ஸ்டாக்ஹோம் சென்றார்.
பிரதமர் மோடியும் ஸ்வீடன் பிரதமர் லோஃப்வென்னும் ஏப்ரல் 17 அன்று சந்தித்து, 2016ம் ஆண்டு மும்பையில் வெளியிட்ட கூட்டறிக்கையை நினைவுகூர்ந்தனர். இந்த அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்கள் பெரிதும் நிறைவேற்றப்பட்டது குறித்து வரவேற்பு தெரிவித்த இரு நாட்டுத் தலைவர்களும், ஒத்துழைப்புக்கான ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த மீண்டும் உறுதியேற்றனர்.
ஜனநாயகத்தின் மீதான நன்மதிப்பு, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை மதித்தல், பன்முகத்தன்மை மற்றும் விதிமுறைகள் சார்ந்த சர்வதேச நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்தியாவும் ஸ்வீடனும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டன. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 2030ம் ஆண்டுச் செயல்திட்டம், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, மனித உரிமைகள், பாலினச் சமத்துவம், மனிதநேயப் பிரச்சனைகள், சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட, இருநாட்டு நலன் சார்ந்த முக்கிய சர்வதேசப் பிரச்சனைகள் குறித்துப் பேச்சு நடத்துவது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்ற உறுதிப்பாட்டை இருநாட்டுப் பிரதமர்களும் மீண்டும் உறுதி செய்தனர். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர்கள் இருவரும், பாரீஸ் உடன்படிக்கை மீதான பொதுவான உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினர். மேலும், கூட்டறிக்கையின் அடிப்படையில், பாதுகாப்புக் கொள்கை சார்ந்த பேச்சுவார்த்தைகளை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் தொடர்ந்து மேற்கொள்ளவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
ஐ நா மற்றும் இதர சர்வதேச அமைப்புகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். 2030ம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுப்பு நாடுகளுக்கு ஐ நா பொதுச்சபை ஆதரவாக இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஐ நா பொதுச் செயலாளர் மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர். ஐ நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை உறுதி செய்த இருதலைவர்களும், பாதுகாப்புச் சபையில் உறுப்பு நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் அளித்தல், பொறுப்பேற்பு, வலுவான மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் யதார்த்த நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க வேண்டியது குறித்தும் விவாதித்தனர். ஐ நா பாதுகாப்புச் சபையில் (2021-22) இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினர் ஆவதற்கும், சீரமைக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் ஸ்வீடன் அளித்த ஆதரவுக்காக அந்நாட்டு பிரதமர் லோஃப்வெனுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சர்வதேச ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு முறைகளை வலுப்படுத்தி, அணுஆயுத ஒழிப்புக்கான நோக்கங்களுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படவும் இருபிரதமர்களும் உறுதியேற்றனர். சர்வதேச ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா அண்மையில் முக்கியப் பொறுப்பெற்றிருப்பதை வரவேற்ற ஸ்வீடன் பிரதமர், ஆஸ்திரேலியா குழு, வாஸனார் ஏற்பாடு, ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் அணுஆயுத ஏவுகணை ஒழிப்பு தொடர்பான தி ஹேக் நடைமுறைகள் போன்றவற்றிலும் இந்தியாவின் பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும் அணு எரிபொருள் விநியோக அமைப்பில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு ஸ்வீடன் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு, தீவரவாதக் குழுக்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது, பயங்கரவாத வன்முறைகளைத் தடுப்பது போன்றவற்றில் மேலும் ஒற்றுமையும், வலுவான சர்வதேச ஒத்துழைப்பும் தேவை என்றும் இரு பிரதமர்களும் குறிப்பிட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேசச் சட்ட நடைமுறைகளை அவ்வப்போது மேம்படுத்தி, மாறிவரும் பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பது மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
சர்வதேசச் பயங்கரவாதம் தொடர்பான வரைவுக் கொள்கைகளை விரைவில் இறுதி செய்ய வேண்டுமெனவும் இருநாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிக்க, இந்தியாவும் ஸ்வீடனும் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகள் மூலம், கீழ்க்காணும் இந்தியா-ஸ்வீடன் கூட்டுச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன :
கண்டுபிடிப்பு
- நீடித்த எதிர்காலத்திற்கான பலதரப்புக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதுடன், வளம் மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர உறுதியேற்பு, பருவநிலை மாற்றம் போன்ற சமூகச் சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நீடித்த வளர்ச்சியை அடைதல்.
- ஸ்வீடனின் காப்புரிமைப் பதிவு அலுவலகம் மற்றும் இந்தியாவின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிவுசார் காப்புரிமைத்துறையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒத்துழைப்புக்களை அதிகரித்தல்.
வர்த்தகம் மற்றும் முதலீடு
- ”இந்தியாவில் முதலீடு” திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஸ்வீடன் முதலீடு மற்றும் ”ஸ்வீடனில் வர்த்தகம்” திட்டத்தின் கீழ் ஸ்வீடனில் இந்தியா முதலீடு செய்தல் போன்ற வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- நவீன நகரங்கள் திட்டம், டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா-ஸ்வீடன் இடையிலான வர்த்தக ஒத்துழைப்புக்களை மேம்படுத்த, இந்தியா-ஸ்வீடன் தொழிலதிபர்கள் இடையிலான வட்டமேஜை பணிகளை ஊக்குவிப்பதுடன், இருதரப்பு உறவு, கருத்துக்கள், ஒத்துழைப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்லுதல்.
நவீன நகரங்கள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து
- இடப்பெயர்ச்சி அடிப்படையிலான நகர்ப்புற வளர்ச்சி, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், கழிவுமேலாண்மை, கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு, குளிர்ச்சி மற்றும் சுற்றுப்பொருளாதாரம் போன்ற, நவீன நகரங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வதுடன், அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ளுதல், பேச்சுவார்த்தை மற்றும் திறன் உருவாக்குதல்.
- மின்இயக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
- ரயில்வேயில் குறிப்பாக ரயில்வே கொள்கை மேம்பாடு, பாதுகாப்பு, பயிற்சி ரயில்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றிலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது.
நவீன, நீடித்த மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
- நவீன மீட்டர்கள் தேவையை ஈடு செய்தல், எரிசக்தித் தர மேலாண்மை, தானியங்கி மின்பகிர்மானம், மின்சார வாகனம் / எரிசக்தியூட்டல் கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி, திறன் வளர்ப்பு, கொள்கை ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக மாதிரி உள்ளிட்ட சந்தை வடிவமைப்பு முன்தேவைகளுக்கான கல்வியறிவு மூலம் புதுப்பிக்கத்தக்க ஒருங்கிணைப்பு போன்ற நவீன மின்தொகுப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்குதல் மற்றும் செயல்விளக்கம் தொடர்பாகப் பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேற்கொள்ளுதல்.
- இந்தியா-ஸ்வீடன் கண்டுபிடிப்பு, ஊக்குவிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்திச் சிக்கனத்தைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களைக் கூர்நோக்குதல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அதிநவீன எரிசக்தித் தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக ஒத்துழைப்பு போன்றவற்றை விரிவுபடுத்துதல்.
மகளிர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்
- மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஸ்வீடன் மற்றும் இந்திய நடிகர்கள் செயல்படுத்தும் “க்ராப்ட்ஸ் ஆம்லா” போன்ற திட்டத்தின் மூலம், மகளிருக்கு ஃபோர்க் லிப்ட் இயக்குநர், கிடங்கு மேலாளர், உதிரிபாக இணைப்பு ஊழியர் போன்ற பணிகளுக்குத் திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத்திறனை ஏற்படுத்தி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூட்டு முயற்சிகளை ஊக்குவித்தல்.
பாதுகாப்பு
- பாதுகாப்புத் துறையில் முக்கியமான தகவல்களை இருதரப்பும் பாதுகாத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான வாய்ப்புக்களை ஆராய்தல்.
- ராணுவஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்வீடன் பேச்சு வார்த்தைகளை அதிக அளவில் மேற்கொள்வது. இந்தியா-ஸ்வீடன் பாதுகாப்புக் கருத்தரங்குகளை 2018-19ல் இந்தியா-ஸ்வீடனில் நடத்துவது, இந்தியா-ஸ்வீடன் தொழில் அதிபர்களிடையேயான வட்டமேஜைப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புக்களை ஆராய்தல், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி வழித்தடத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்.
- பாதுகாப்பு மற்றும் விண்வெளிச் சாதன உற்பத்தி, பெரும் தொழிலதிபர்களுடன் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதை ஊக்குவித்தல்.
விண்வெளி மற்றும் அறிவியல்
- விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கான இருதரப்பு ஒத்துழைப்புக்களின் அவசியத்தை அங்கீகரித்தல். விண்வெளி அமைப்புக்கள் மற்றும் இதர விண்வெளி நிறுவனங்கள் இடையே ஒத்துழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை ஊக்குவித்தல், குறிப்பாக, புவிக் கண்காணிப்பு, துணைக்கோள்களைக் கண்டறிதல் மற்றும் செயற்கைக்கோள் தரைக்கட்டுப்பாட்டு நிலையச் செயல்பாடுகள் போன்றவை தொடர்பாக இந்தியா-ஸ்வீடன் விண்வெளிக் கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் இந்தியக் குழுவினர் ஸ்வீடன் விண்வெளி அமைப்புக்களைப் பார்வையிடுதல்.
- ஸ்வீடன்-இந்தியா பங்களிப்பில், ஐரோப்பிய அணுப்பிளவு ஆதார அமைப்புகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்.
சுகாதாரம் மற்றும் வாழ்வியல் அறிவியல்
- சுகாதாரக் கவனிப்பு மற்றும் பொதுச் சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், சுகாதார ஆராய்ச்சி, மருந்து நிறுவனக் கண்காணிப்பு மற்றும் நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பு உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட சுகாதாரப் பிரிவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
தொடர் நடவடிக்கை
- அறிவியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இந்தியா-ஸ்வீடன் கூட்டு ஆணையம், வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறைகள் மற்றும் கூட்டுநடவடிக்கைக் குழுக்கள், இந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணித்தல்.