நாளை பிப்ரவரி 12 2019 அன்று ஹரியானா குருஷேத்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மாநாடான தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2019-ம் ஆண்டுக்கான தூய்மை விருதுகளை அவர் வழங்க உள்ளார். குருஷேத்ராவில் கழிவறைகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது குறித்த கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். ஹரியானாவில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்து அடிக்கல்லும் நாட்டுவார்.
தூய்மை பாரதம் இயக்கத்தில் ஊரகப் பெண்கள், தலைமையேற்று மேற்கொள்ளும் பணிகள் குறித்து கவனம் ஈர்ப்பதே தூய்மை சக்தி 2019 என்ற தேசிய நிகழ்வின் நோக்கமாகும். நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவிகளும், பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக்க் கொண்டுள்ள இந்நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம் ஹரியானா அரசுடன் இணைந்து தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. தூய்மை பாரதத்திற்காக ஊரகப் பகுதிகளில், அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்படும் சிறந்த முறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்படும். தூய்மை பாரதம் மற்றும் சமீபத்தில் உலகளவில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மையான, அழகான கழிவறை என்ற பிரச்சாரத்தின் சாதனைகள் குறித்து எடுத்துரைப்பார்கள்.
பின்னணி:
குஜராத் காந்தி நகரில், 2017 ஆம் ஆண்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தூய்மை சக்தியின் முதல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். 2017-ல் தூய்மை சக்தி நிகழ்ச்சிக்காக, சர்வதேச பெண்கள் தினத்தன்று நாடு முழுவதிலுமிருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் குஜராத்தில் ஒன்று கூடினர். இவர்களிடம் உரையாற்றிய பிரதமர் அவர்களை கவுரவிக்கவும் செய்தார்.
உத்தரப்பிரதேசம் லக்னோவில் தூய்மை சக்தியின் 2-வது நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 8,000 பஞ்சாயத்துத் தலைவிகள் 3,000 பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் பெண் சாதனையாளர்கள் நிகழ்த்திய சிறந்த பங்களிப்புக்காக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
தற்போது இந்நிகழ்ச்சியின் 3-வது தொகுப்பு குருஷேத்ராவில் நடைபெற உள்ளது.
சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து ஊரகப் பெண் சாதனையாளர்கள் சமூகத்தை ஒன்று திரட்டி மாற்றத்தின் முகவர்களாக மாறி, தூய்மை பாரதம் போன்ற முன்முயற்சிகளை பெண்கள் முன்னின்று வழிநடத்தி செல்வதற்கு தூய்மை சக்தி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அக்டோபர் 2, 2019-க்குள் தூய்மையான மற்றும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக அக்டோபர் 2, 2014 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்த தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.