பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப், அவரது மனைவி திருமதி மெலானியா டிரம்ப் ஆகியோர் இந்தியாவில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கின்றனர். அதிபர் திரு டிரம்பின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, அதிபர் டிரம்ப், அவரது மனைவி ஆகியோர் புதுதில்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்துவார்கள்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உலகளாவிய உத்திபூர்வமான உறவு, இருநாடுகளின் மக்களுக்கு இடையில் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, விழுமியப் பகிர்வுகள், புரிந்துணர்வு மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கிறது. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரின் தலைமையின் கீழ் வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலக விஷயங்களில் ஒத்துழைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்ததுடன், மக்களுக்கு இடையிலான உறவுகளும் அதிகரித்துள்ளன. இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும் மற்றும் உத்திபூர்வமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் இருதலைவர்களுக்கும் பெரிதும் வாய்ப்பாக அமையும்.