ருவாண்டா குடியரசு (ஜூலை 23-24), உகாண்டா குடியரசு (ஜூலை 24-25), தென்னாப்பிரிக்க குடியரசு (ஜூலை 25-27) ஆகியவற்றிற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். 20 ஆண்டுகளுக்குப் பின், உகாண்டாவுக்கு நமது பிரதமர் முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்கிறார்.
ருவாண்டாவிலும், உகாண்டாவிலும் அதிபர்களுடன் இருதரப்பு பேச்சு, வர்த்தகர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் தூதுக்குழு நிலையிலான பேச்சுக்கள், சந்திப்புகள் உள்ளிட்டவை பிரதமரின் அலுவல்பூர்வ செயல்பாடுகளாக இருக்கும். ருவாண்டாவில் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்திற்கு பிரதமர் செல்லவிருக்கிறார். ருவாண்டா அதிபர் திரு. பால் ககாமே தனிப்பட்ட முறையில் மேற்கொண்டிருக்கும் தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான “கிரிங்கா” (ஒரு குடும்பத்திற்கு ஒரு பசு) நிகழ்வில் பிரதமர் பங்கேற்பார். உகாண்டா பயணத்தின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார். உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவது இதுவே முதன்முறையாகும்.
தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு அதிபருடன் பிரதமர் இருதரப்பு சந்திப்பை மேற்கொள்வார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரிக்ஸ் தொடர்பான சந்திப்புகளிலும் அவர் பங்கேற்பார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே, அதில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினர் பெரும் எண்ணிக்கையில் உள்ளதும், வளர்ச்சியின் பங்குதாரர் என்ற வகையில், நெருக்கமான இணைப்பைக் கொண்டதுமான ஆப்பிரிக்காவுடன் இந்தியா இதமான நட்பு ரீதியான உறவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம், வேளாண்மை மற்றும் பால்வள ஒத்துழைப்பு போன்ற துறைகளில் ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க நாடுகளுடன் பல்வேறு துறைகளில் நமது செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்குத் தீவிரமாகியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் நிலையில் ஆப்பிரிக்காவுக்கு 23 முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்பிரிக்கா உயர் முன்னுரிமை பெற்றுள்ளது. ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கான பிரதமரின் பயணம் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும்.