ஆப்கானிஸ்தானில் லாலந்தர் (ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி மூலம் 2021 பிப்ரவரி 9 அன்று கையெழுத்தானது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் திரு ஹனிஃப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் மேன்மைமிகு டாக்டர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கிடையேயான புதிய வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது. காபூல் மாநகரத்தின் பாதுகாப்பான குடிநீருக்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அருகிலுள்ள பகுதிகளின் நீர்ப்பாசனத்திற்கும், ஏற்கனவே உள்ள நீர்ப்பாசன மற்றும் கழிவு நீர் வசதிகளுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கும், அப்பகுதியில் வெள்ளத் தடுப்பு மேலாண்மை பணிகளுக்கும், மின்சாரத்தை வழங்குவதற்கும் லாலந்தர் (ஷட்டூட்) அணை பங்காற்றும்.
பிரதமர் மற்றும் அதிபரால் ஜூன் 2016-இல் திறந்து வைக்கப்பட்ட இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவு அணைக்கு (சல்மா அணை) பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் கட்டப்படவிருக்கும் இரண்டாவது முக்கிய அணை இதுவாகும். லாலந்தர் (ஷட்டூட்) அணையைக் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆப்கானிஸ்தானின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் நீண்டகால உறுதியையும், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால கூட்டையும் பிரதிபலிக்கிறது. ஆப்கானிஸ்தானுடனான நமது வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானின் அனைத்து 34 மாகாணங்களிலும் 400-க்கும் அதிகமான திட்டங்களை இந்தியா நிறைவு செய்துள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கிடையேயான பாரம்பரிய உறவைக் குறித்து எடுத்துரைத்ததோடு, அமைதியான, ஒற்றுமையான, நிலையான, வளமான மற்றும் ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று உறுதியளித்தார்.