மியான்மர் பாதுகாப்புப் படைகளின் தலைமை கமாண்டர் சீனியர் ஜென்ரல் மின் ஆங் ஹ்லைங் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (29.07.19) சந்தித்துப் பேசினார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு மியான்மர் சீனியர் ஜென்ரல் வாழ்த்து தெரிவித்தார். கடந்த சில வருடங்களில் இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான தனித்துவம் மிக்க நட்புறவு ஒட்டுமொத்தமாக பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் மியான்மர் நாட்டிற்கு சென்றிருந்தபோது தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் உபசரிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். தீவிரவாத எதிர்ப்பு, திறன் வளர்ப்பு, இரு நாட்டு ராணுவத்திற்கிடையேயும், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதாரம், வளர்ச்சித்திட்டங்களில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு சிறப்பான நிலையை எட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மியான்மர் நாட்டுடனான தனித்துவம் மிக்க இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பிரதமர் எடுத்துரைத்தார்.