ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 19 அன்று ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர். முதலாவது வருடாந்திர உச்சிமாநாடு கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி புதுதில்லியில் பிரதமர் அல்பானீஸின் இந்திய வருகையின் போது நடைபெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்களது ஆதரவை பிரதமர்கள் மீண்டும் உறுதி செய்தனர். ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், கல்வி, திறன்கள் மற்றும் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, விளையாட்டு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். நிகழ்ச்சியில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டாண்மை தொடங்கப்பட்டதையும் பிரதமர்கள் வரவேற்றனர்.
பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.