அதிபர் பைடன் அவர்களே,
துணை அதிபர் ஹாரிஸ் அவர்களே,
மேன்மைதங்கியவர்களே,
வணக்கம்!
கொவிட் பெருந்தொற்று தொடர்ந்து வாழ்க்கையை, வழங்கல் தொடர்களை, திறந்த சமூகங்களின் உறுதியான பரிசோதனைகளை இடையூறு செய்கிறது. இந்தியாவில் நாங்கள் பெருந்தொற்றுக்கு எதிராக மக்களை மையப்படுத்திய உத்திகளை கடைப்பிடித்தோம். எங்களின் வருடாந்தர சுகாதார கவனிப்பு பட்ஜெட்டுக்கு முன்எப்போதும் இல்லாத உயர் அளவாக நாங்கள் ஒதுக்கீடு செய்தோம்.
எங்களின் தடுப்பூசித்திட்டம் உலகிலேயே மிகவும் பெரியதாகும். 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் ஏறத்தாழ 90 சதவீதம் பேருக்கும் 50 மில்லியனுக்கும் அதிகமான சிறார்களுக்கும் நாங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்த நான்கு தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. இந்த ஆண்டு 5 பில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.
இரு தரப்பு மற்றும் கோவாக்ஸ் மூலம் 98 நாடுகளுக்கு 200 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை நாங்கள் வினியோகித்துள்ளோம். பரிசோதனை, சிகிச்சை, தரவு நிர்வாகம் ஆகியவற்றுக்கு குறைந்த செலவில் கொவிட் தடுப்பு தொழில் நுட்பங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இவற்றை மற்ற நாடுகளுக்கும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.
இந்தியாவில் கொவிடுக்கு எதிரான எங்களின் போராட்டத்திற்கு உதவியாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாரம்பரிய மருந்துகளை ஏராளமாக பயன்படுத்தி எண்ணற்ற உயிர்களை நாங்கள் பாதுகாத்துள்ளோம்.
பாரம்பரிய மருந்துகள் பற்றிய ஞானம் உலகுக்கு கிடைக்கச்செய்வதை நோக்கமாக கொண்டு இந்தியாவில் “பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார மையத்திற்கு” கடந்த மாதம் நாங்கள் அடிக்கல் நாட்டியுள்ளோம்.
மேன்மைதங்கியவர்களே
எதிர்கால சுகாதார பிரச்சனைகளை முறியடிப்பதற்கு உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்பது தெளிவாகும். உலக சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினர் என்ற முறையில் இந்த முயற்சிகளில் முக்கியமான பங்கு வகிக்க இந்தியா தயாராக உள்ளது.
நன்றி
உங்களுக்கு மிக்க நன்றி