மேன்மை தங்கிய எனது சகோதரர் அவர்களே, இன்றைய மெய்நிகர் உச்சிமாநாட்டுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். முதலில், உங்களையும், யுஏஇ-யையும் வாழ்த்த நான் விரும்புகிறேன். கொவிட் பெருந்தொற்றுக்கு இடையில், எக்ஸ்போ 2020 மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளீர்கள். துரதிருஷ்டவசமாக, இந்த எக்ஸ்போவில் கலந்து கொள்ள யுஏஇ-வுக்கு என்னால் பயணம் செய்ய இயலவில்லை.மேலும், நாம் நேரில் சந்தித்தும் நாளாகிறது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நமது நட்புறவுகள் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதை இன்றைய மெய்நிகர் உச்சிமாநாடு காட்டுகிறது.
மேன்மை தங்கியவர்களே, நமது உறவை வலுப்படுத்துவதில் தங்களது தனிப்பட்ட பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொவிட் பெருந்தொற்று காலத்திலும், யுஏஇ-வில் உள்ள இந்திய சமுதாயத்தினர் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். யுஏஇ-வில் அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவும், யுஏஇ-வும் தீவிரவாதத்துக்கு எதிராக எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும்.
மேன்மை தங்கியவர்களே, இந்த ஆண்டு, நம் இரு நாடுகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாயந்ததாகும். யுஏஇ நிறுவப்பட்ட 50-வது ஆண்டை நீங்கள் கொண்டாடுகிறீர்கள். அடுத்த 50 ஆண்டுகளுக்கான தொலைநோக்கை நீங்கள் நிர்ணயித்துள்ளீர்கள். நாங்கள் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை இந்த ஆண்டில் கொண்டாடுகிறோம். நாங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உரிய லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். எதிர்காலத்துக்கான இரு நாடுகளின் தொலைநோக்கும் ஒரே மாதிரியான பொது அம்சங்களைக் கொண்டதாகும்.
மேன்மை தங்கியவர்களே, நமது இரு நாடுகளும், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான ஒப்பந்தத்தை மூன்று மாதங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து இறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு வருடக்கணக்காகும். நமது பொருளாதார உறவில் இது புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நமது வர்த்தகம் $ 60 பில்லியனிலிருந்து $ 100 பில்லியனாக அடுத்த 5 ஆண்டுகளில் உயரும்.
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, மக்களுக்கிடையிலான தொடர்பு ஆகியவை நமது ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாகும். அதேசமயம், மேலும் பல துறைகளிலும் நமது உறவை வலுப்படுத்த வாய்ப்புகள் நிறைந்துள்ளன. உணவு வழித்தடங்கள் பற்றிய நமது புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மிகச்சிறந்த முன்முயற்சியாகும். இதில் யுஏஇ முதலீடு செய்ய முன்வந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். யுஏஇ-வின் உணவுப்பாதுகாப்பில் இந்தியாவை நம்பகமான கூட்டு நாடாக இது மாற்றும்.
அடுத்த ஆண்டு, இந்தியா ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது. அதேபோல, யுஏஇ, சிஓபி- 28 மாநாட்டை நடத்தவுள்ளது. பருவநிலை என்பது உலக அளவில் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரலை வகுப்பதில், பரஸ்பர ஒத்துழைப்பை நாம் அதிகரிக்க வேண்டும். ஒரே மனதுடனான நாடுகளுடன் சேர்ந்து பாடுபடும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை நமது இரு நாடுகளும் கொண்டுள்ளன. இந்தியா-யுஏஇ-இஸ்ரேல்-அமெரிக்கா என்ற குழு, குறிப்பாக தொழில்நுட்பம், புத்தாக்கம், நிதி ஆகியவற்றில் நமது கூட்டு இலக்குகளை அடைவதில் வெற்றி பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த உச்சிமாநாடு வெற்றியடைய மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.