எனது அருமை நண்பர், மேதகு, இப்ராஹிம் சோலிஹ் அவர்களே,
மாலத்தீவைச் சேர்ந்த மதிப்புக்குரிய நண்பர்களே,
எனது சகாக்களே,
நமஸ்காரம்!
அதிபர் சோலிஹ்-ஐ தொடர்பு கொள்வதில் நான் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் மாலத்தீவும், எங்களது இதயங்களிலும், மனதிலும் எப்போதும் நிறைந்திருக்கிறீர்கள்.
நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி முதலில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகம் மற்றும் மாலத்தீவின் வளர்ச்சியில் இது குறிப்பிடத்தகுந்த ஆண்டாகும். இந்தியா-மாலத்தீவு நட்புறவுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக கருதப்படுகிறது.
எனது அரசின் “அண்டை நாடு முதலில்” மற்றும் உங்களது அரசின் “இந்தியா முதலில்” என்ற கொள்கைகள், நமக்கிடையேயான இருதரப்பு நட்புறவை பல்வேறு துறைகளிலும் வலுப்படுத்தியுள்ளன. நாம் மேற்கொள்ளும் முடிவுகளை செயல்படுத்துவதன் மூலம், மாலத்தீவின் பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் திறன் உருவாக்க நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன.
மாலத்தீவின் முன்னுரிமை பணிகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தற்போது, “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட” அதிவேக இடைமறித்து தாக்கும் போர்க்கப்பல், முறைப்படி உங்களது கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன கப்பலை எனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள எல்&டி நிறுவனம் கட்டியுள்ளது. இந்த கப்பல் மாலத்தீவின் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தவும், உங்களது நீலப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்கவும் உதவும். இந்த ரோந்துக் கப்பலுக்கு இந்தி மற்றும் திவேஹி மொழியில் “வெற்றி” என்பதை குறிக்கும் விதமாக, “காம்யாப்” என்று பெயரிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மேதகு அதிபர் அவர்களே,
அட்டு நகரை மேம்படுத்துவதற்கு உங்களது அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை நினைவுகூற நான் விரும்புகிறேன். தீவுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக, அதிக பயன் அளிக்கக்கூடிய சமுதாய வளர்ச்சித் திட்டங்களை உங்களுடன் இணைந்து நிறைவேற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது.
நண்பர்களே,
நமது இருநாடுகளும் நெருங்கிய நட்புறவுடன் திகழ்வதற்கு, இருநாட்டு மக்கள் இடையேயான நேரடி தொடர்புகளும் ஒரு முக்கிய காரணமாகும். இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாகியுள்ளது. இந்தியா 5 ஆம் இடத்திலிருந்து, 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வாரம், தில்லி, மும்பை மற்றும் பெங்களுருவிலிருந்து மூன்று நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ரூபே பணப்பரிமாற்ற நடைமுறை, இந்தியர்கள் மாலத்தீவு பயணம் மேற்கொள்வதை மேலும் எளிதாக்கும். இந்த சேவை மாலத்தீவு வங்கியின் மூலம் தொடங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
மேதகு அதிபர் அவர்களே,
மாலே நகர மக்களுக்கு பயன்படும் விதமாக, எல்ஈடி தெருவிளக்குகளையும் இன்றைக்கு நாம் அர்ப்பணித்திருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த விளக்குகளை உங்களது பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்பதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இவை 80% செலவை மீதப்படுத்தும்.
மேதகு அதிபர் அவர்களே, ஹூல்ஹூல்மாலேயில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் விளையாட்டரங்கம் கட்டுவதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம்.
34 தீவுகளில் குடிநீர் மற்றும் துப்புரவுத் திட்டங்கள் தொடர்பான பணிகளும், அட்டுவில் சாலை மற்றும் புனரமைப்புப் பணிகளும் விரைவில் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் ஆண்டில், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், மாலத்தீவு மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.
நெருங்கிய நண்பர் மற்றும் கடல்சார் அண்டைநாடு என்ற முறையில் மாலத்தீவின் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கான நமது ஒத்துழைப்பையும் நாம் மேம்படுத்த இருக்கிறோம்.
மேதகு அதிபர் அவர்களே,
தில்லியில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மாலத்தீவில் உள்ள அன்புக்குரிய மக்களுக்கு அமைதியும், வளமும் கிடைக்க எனது நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
மிக்க நன்றி.