பிரதமர் திரு.நரேந்திர, மோடி அவர்கள், இன்று புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் அகராதியை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 5 தொகுதிகள் கொண்ட இந்த அகராதி, 1857 முதலாவது இந்திய சுதந்திர போராட்டம் முதல் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது வரையிலான தியாகிகளின் வரலாற்றை கொண்டுள்ளது என்றார்.
இதில் ஜாலியன்வாலா பாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றின் தியாகிகள், ஆசாத் ஹிந்த் படையின் உயிர்தியாகம் செய்த சிப்பாய்கள் மற்றும் பலரின் வரலாறு இடம் பெற்றுள்ளது. உயிர்தியாகம் புரிந்த தியாகிகளின் பெயர்களை தொகுக்கும் பணி இத்தகைய அளவில் நடைபெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும் என்றார் அவர். இத்தொகுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரையும், அவர்களது முயற்சிக்காக பாராட்டினார்.
ஒரு தேசம், அதன் வரலாற்றில், அதனை உருவாக்கியவர்கள் அல்லது முக்கிய பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்து கவுரவிக்கவில்லையெனில், பாதுகாப்பான எதிர்காலத்தையும் கொண்டிருக்காது என பிரதமர் உறுதிபட கூறினார். அவ்வகையில், இம்முயற்சியானது, கடந்த காலத்தை நினைவுகூறும் வகையில் இருப்பதுடன், பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும். இம்முயற்சி குறித்து, குறிப்பாக இளைஞர்கள் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டும்.
நமது சுதந்திர போராட்ட கதாநாயகர்களின் வீரசாகசங்களை நினைவுகூர்ந்து வளர்ப்பதே மத்திய அரசு முயற்சியாகும் என பிரதமர் தெரிவித்தார். இது எதிர்கால சந்ததியினரிடையே நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், அவர்களின் உணர்வில் “முதலில் இந்தியா” என்று சிந்திக்க வைக்கும் என்றார்.
சுதந்திரத்திற்கு பின்பாக, இந்தியா, இதுவரை, போர் நினைவுச்சின்னம் எதையும் கொண்டிருக்கவில்லை என பிரதமர் தெரிவித்தார். தேசிய போர் நினைவுச் சின்னம் அல்லது ராஷ்ட்ரிய சமர் ஸ்மாரக்கை சமீபத்தில் அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தாக அவர் கூறினார். அதுபோன்றே, தேசிய காவல் நினைவுச் சின்னமும் கட்டப்பட்டுள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேலை கவுரவிக்கும் வகையில், உலகின் உயர்ந்த சிலையான, ஒற்றுமையின் சிலை குறித்தும் அவர் குறிப்பிட்டார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆசாத் ஹிந்த் படையின் நினைவாக, செங்கோட்டையில் கிராந்தி மந்திர் அமைக்கப்பட்டுள்ளது என்றார். நமது சுதந்திர போராட்டத்தின் பங்கேற்ற வீரசாகசங்கள் செய்த பழங்குடியின கதாநாயகர்களை நினைவுகூரும் வகையிலும் அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் (பொறுப்பு) டாக்டர்.மஹேஷ் ஷர்மா அவர்களும் கலந்துக் கொண்டார்.
பின்னணி
1857 சுதந்திர போராட்ட எழுச்சியின் 150வது ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்திற்காக (ஐ.சி.எச்.ஆர்), கலாச்சார அமைச்சகம் இந்தியாவின் சுதந்திர போராட்ட “தியாகிகள் அகராதி”யை தொகுக்கும் பணியை துவக்கியது.
தியாகி என்பவர், இந்திய விடுதலைக்காக தேசிய இயக்கத்தில் பங்கேற்றபோது உயிர்நீத்த அல்லது அடக்குமுறையின்போது அல்லது சிறையில் இருக்கும்போது கொல்லப்பட்ட அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என இந்த அகராதியில் விளக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிர்நீத்த முன்னாள் இந்திய தேசிய இராணுவத்தினர் அல்லது முன்னாள் இராணுவத்தினரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இது, 1857 சுதந்திர போராட்ட எழுச்சி, ஜாலியன்வாலா பாக் படுகொலை (1919), ஒத்துழையாமை இயக்கம் (1920-22), பொது ஒத்துழையாமை இயக்கம் (1930-34), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942-44), புரட்சிகர இயக்கங்கள் (1915-34), விவசாய இயக்கங்கள், மலைவாழ் இயக்கங்கள், குறுநில மாநிலங்களில் (பிராஜாமண்டல்) பொறுப்பான அரசிற்கான போராட்டம், இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ. 1943-45), ராயல் இந்தியன் கடற்படை எழுச்சி (ஆர்.ஐ.என்.1946), உள்ளிட்டவற்றின் தியாகிகளை கொண்டுள்ளது.
இந்த வெளியீடு (மண்டல வாரியாக) ஐந்து தொகுகளில், கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது:
• “தியாகிகள் அகராதி: இந்தியாவின் சுதந்திர போராட்டம் (1857-1947)”, தொகுதி 1, பகுதிகள் I & II. இத்தொகுதியில், தில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த 4400-க்கும் மேற்பட்ட தியாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
• “தியாகிகள் அகராதி: இந்தியாவின் சுதந்திர போராட்டம் (1857-1947)”, தொகுதி 2, பகுதிகள் I & II. இத்தொகுதியில், உத்திரபிரதேசம், உத்தர்காண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3500-க்கும் மேற்பட்ட தியாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
• “தியாகிகள் அகராதி: இந்தியாவின் சுதந்திர போராட்டம் (1857-1947)”, தொகுதி 3. இத்தொகுதியில், மகராஷ்டிரம், குஜராத் மற்றும் சிந்து-ஐ சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட தியாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
• “தியாகிகள் அகராதி: இந்தியாவின் சுதந்திர போராட்டம் (1857-1947)”, தொகுதி 4. இத்தொகுதியில், வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுராவை சேர்ந்த 3300-க்கும் மேற்பட்ட தியாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
• “தியாகிகள் அகராதி: இந்தியாவின் சுதந்திர போராட்டம் (1857-1947)”, தொகுதி 5. இத்தொகுதியில், ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட தியாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.