பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனை ஒரு சில நாட்களுக்கு முன் இழந்துவிட்டோம். புரட்சிகரமான தொலைநோக்குப் பார்வை கொண்ட வேளாண் விஞ்ஞானியை நமது நாடு இழந்துவிட்டது. இந்தியாவுக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய அவரது நினைவுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்தியாவை நேசித்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதன் நமது நாடு, குறிப்பாக நமது விவசாயிகள் வளமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். கற்பதில் சிறந்து விளங்கிய அவர், எந்தத் துறையையும் தேர்வு செய்திருக்க முடியும், ஆனால், 1948-ம் ஆண்டின் வங்கப் பஞ்சத்தால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ஏதாவது ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்றால் அது வேளாண் துறை படிப்பாகத்தான் இருக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்.
இளம் வயதில் டாக்டர் நார்மன் போர்லாவுடன் தொடர்பு கொண்டு அவரது பணிகளைப் பெருமளவு பின்பற்றிய அவருக்கு 1950-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேராசிரியர் பதவி தேடிவந்தது. ஆனால், அவர் அதை நிராகரித்தார். இந்தியாவில் பணியாற்ற இந்தியாவுக்காக பணியாற்றவே அவர் விரும்பினார்.
சவாலான சூழ்நிலைகளில் நமது தேசத்திற்கு சுயசார்பான, தன்னம்பிக்கை கொண்ட பாதைக்கு வழிகாட்டுவதில் மிகப்பெரும் ஆளுமையாக அவர் விளங்கினார். சுதந்திரம் அடைந்தபின், முதல் 20 ஆண்டுகளில் நாம் எதிர்கொண்ட பல சவால்களில் உணவுப் பற்றாக்குறை முதன்மையானதாக இருந்தது. 1960-களின் முற்பகுதிகளில் பஞ்சத்தின் அச்சுறுத்தல் இருந்தது. பேராசிரியர் சுவாமிநாதனின் சமரசமற்ற உறுதிப்பாடும் தொலைநோக்குப் பார்வையும் வேளாண் வளத்திற்கான புதிய சகாப்தம் பற்றி சிந்திக்க வைத்தது. வேளாண் துறையில் குறிப்பாக கோதுமை உற்பத்தியில் முன்மாதிரியான அவரின் பணிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா உணவுப்பற்றாக்குறை நாடு என்ற நிலையில் இருந்து உணவில் தற்சார்புள்ள நாடு என மாறியது. இந்த மகத்தான சாதனையால் “இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை” என்ற பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.
இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு பசுமைப் புரட்சி எடுத்துக்காட்டாக இருந்தது. கோடிக்கணக்கான சவால்களை நாம் எதிர்கொண்ட போதிலும் அவற்றை வெல்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்ட கோடிக்கணக்கான சிந்தனையாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். பசுமைப் புரட்சி தொடங்கிய 50 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இந்திய வேளாண் துறை, அதிநவீனமாகவும், முற்போக்கானதாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இதற்கு அடித்தளமிட்ட பேராசிரியர் சுவாமிநாதனை ஒரு போதும் மறக்கவியலாது.
உருளைக் கிழங்கு பயிர்களை தாக்கிய பாரசைட்ஸ் பற்றிய ஆய்வை அவர் பல ஆண்டுகள் மேற்கொண்டார். இதன் பயனாக உருளைக் கிழங்கு பயிர் குளிர்ச்சியான காலநிலையையும் தாங்கவல்லதாக மாறியது. தற்போது மிகச் சிறந்த உணவாக சிறுதானியங்கள் பற்றி உலகமே பேசுகிறது. ஆனால், பேராசிரியர் சுவாமிநாதன் 1990-களில் தொடங்கி சிறுதானியங்கள் பற்றிய கருத்தை ஊக்கப்படுத்தினார்.
பேராசிரியர் சுவாமிநாதனுடன் எனது தனிப்பட்ட உரையாடல்கள் மிகவும் பரந்து விரிந்த தன்மை கொண்டது. 2001-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பின் இந்த கலந்துரையாடல்கள் தொடங்கின. இந்த நாட்களில் வேளாண்மையின் வலிமையை குஜராத் அறிந்திருக்கவில்லை. தொடர்ச்சியான வறட்சி, கடுமையான புயல், நிலநடுக்கம் போன்றவற்றால் இம்மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் தடைபட்டது. நாங்கள் தொடங்கிய பல முன்முயற்சிகளில் ஒன்றாக மண்வள அட்டைத் திட்டம் இருந்தது. நிலத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளவும் பிரச்னைகளை சரி செய்யவும் இது எங்களுக்கு உதவியது. இந்தத் திட்டம் தொடர்பாக பேராசிரியர் சுவாமிநாதனை நான் சந்தித்தேன். இந்தத் திட்டத்தைப் பாராட்டிய அவர், தமது மதிப்புமிகு கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். இந்தத் திட்டம் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் சமாதானம் செய்ய அவரது ஒப்புதல் பயனுடையதாக இருந்தது, இதன் பயனாக குஜராத் வேளாண் துறையின் வெற்றி சாத்தியமானது.
நான் முதலமைச்சராக இருந்தபோதும் பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற போதும் எங்களின் உரையாடல்கள் தொடர்ந்தன. 2016-ஆம் ஆண்டு சர்வதேச வேளாண் பல்லுயிர் பெருக்க மாநாட்டில் நான் அவரை சந்தித்தேன். அடுத்த ஆண்டு 2017-ல் அவரால் எழுதப்பட்ட நூலின் 2 தொகுதிகள் அடங்கிய தொகுப்பை நான் வெளியிட்டேன்.
உழவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் ஏனெனில் அவர்கள்தான் அனைத்தையும் பாதுகாக்கின்றவர்கள் என்று திருக்குறள் வர்ணிக்கிறது. பேராசிரியர் சுவாமிநாதன் இந்தக் கோட்பாட்டை மிக நன்றாக உணர்ந்திருந்தார். ஏராளமான மக்கள் அவரை “வேளாண் விஞ்ஞானி” என்கிறார்கள். ஆனால், அவர் அதைவிடவும் மேலானவர் என்று நான் எப்போதும் நம்புகிறேன். உண்மையில் அவர், “விவசாயிகளின் விஞ்ஞானி”யாக இருந்தார். அவரது இதயத்தில், எப்போதும் ஒரு விவசாயி இடம் பெற்றிருந்தார். அவரது பணிகளின் வெற்றி கற்ற கல்வியால் மட்டுமே சிறந்தது என்பதாக இருக்கவில்லை. அது சோதனைச் சாலைகளுக்கு வெளியே வயல்களிலும், பண்ணைகளிலும் பெற்ற அனுபவமாக இருந்தது. அறிவியல் சிந்தனைக்கும் அதன் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதாக அவரது பணி அமைந்தது. நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய வேளாண்மைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய அவர், மனிதகுல முன்னேற்றத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயான சமச்சீர் நிலையை வலியுறுத்தினார். சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி கண்டுபிடிப்புகளின் பயன்கள் அவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் பேராசிரியர் சுவாமிநாதன் சிறப்பு கவனம் செலுத்தினார் என்பதை நான் குறிப்பிடவேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்தும் அவர் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வழிகாட்டுதலில் மிகச் சிறந்த முன்னோடியாக பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதன் விளங்கினார். 1987-ஆம் ஆண்டு கௌரவம் மிக்க உலக உணவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற முதலாவது விஞ்ஞானியாக இருந்த அவர், இதற்கான தொகையை லாப நோக்கம் இல்லாத ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுவதற்குப் பயன்படுத்தினார். இன்று வரை இந்த அறக்கட்டளை பல துறைகளில் விரிவான பணிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணற்ற சிந்தனையாளர்களை உருவாக்கி கற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது. விரைவாக மாறிவரும் உலகத்தில் அறிவின் ஆற்றல், வழிகாட்டுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்பை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. மணிலாவில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்தது இவரது மிகச் சிறந்த பணிகளில் ஒன்றாகும். இதன் தெற்காசிய பிராந்திய மையம் 2018-ல் வாரணாசியில் திறக்கப்பட்டது.
டாக்டர் சுவாமிநாதனுக்கு புகழாரம் சூட்டும் திருக்குறளை மீண்டும் ஒருமுறை நான் குறிப்பிடுகிறேன். “எண்ணிய, எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்” தமது இளமைக் காலத்தில் வேளாண்மையை வலுப்படுத்தி விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்த அவர், அந்த பாதையிலேயே உறுதியுடன் செயல்பட்டார். அந்தப் பணியை அவர் வெகு சிறப்பாகவும் புதுமைச் சிந்தனையோடும், ஆர்வத்தோடும் மேற்கொண்டார். வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்பையும், நிலைத்தன்மையையும் நாம் முன்னெடுக்கும் போது டாக்டர் சுவாமிநாதனின் பங்களிப்பு தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும், வழிகாட்டும். விவசாயிகளின் நலன், வேளாண் விரிவாக்கம், வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல், நிலைத்தன்மை, அடுத்தத் தலைமுறைகளுக்கான வளம் ஆகியவற்றை உறுதி செய்தல் ஆகிய அவர் நேசித்த கோட்பாடுகளுக்கு நமது உறுதிப்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும்.