பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அறிவுரையின்படி, சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த உயர்மட்டக் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், கரோனா வைரஸ் பரவுவது தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள், ஆயத்த நிலை மற்றும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதன்மைச் செயலாளரிடம் எடுத்துரைத்தனர்.
மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அதிவிரைவு குழுக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான கண்காணிப்புப் பணிகள் குறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் முதன்மைச் செயலாளருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட பிற அமைச்சகங்கள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை முதன்மைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதிகாரிகள் முதன்மைச் செயலாளரிடம் உறுதிபடத் தெரிவித்தனர்.
இதுவரை 7 சர்வதேச விமான நிலையங்களில், 115 விமானங்கள் மூலம் வந்திறங்கிய 20,000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக்கூடங்கள், கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருப்பதோடு, தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு ராஜீவ் கௌபா, உள்துறை செயலாளர் திரு அஜய் குமார் பல்லா, வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விஜய் கோகலே, பாதுகாப்புத்துறை செயலாளர் திரு அஜய் குமார், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் திரு ப்ரீத்தி சுதன், விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு பிரதீப் சிங் கரோலா மற்றும் பல்வேறு உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.