புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 15-வது நிறுவக நாள் விழாவில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா உரையாற்றினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தோடு, ஆரம்ப நாட்களில் தமக்கிருந்த இணைப்பைத் தமது உரையில் நினைவுகூர்ந்த டாக்டர் மிஸ்ரா, இந்த ஆணையத்தின் முன் முயற்சிகள் பேரிடர் மேலாண்மையில் பரவலாக அங்கீகாரம் பெற்றிருப்பதற்காக திருப்தி வெளியிட்டார்.
அனைத்து நிலைகளிலும் நமது மேம்பாட்டு நடவடிக்கைகளோடு தொடர்புடைய பேரிடர் ஆபத்துக் குறைப்பை உறுதி செய்ய, அனைத்து பங்கேற்பாளர்களுடன் ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் இந்த ஆணையத்தின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
இந்த ஆண்டு நிறுவக தினத்தின் மையப் பொருளான “தீயிலிருந்து பாதுகாப்பு” என்பது பற்றி பேசிய அவர், அமேஸான் காடுகளில் ஏற்பட்ட பேரழிவு தீ விபத்து, சூரத் தீ விபத்து போன்ற சம்பவங்களால் இந்த விஷயம் உலக அளவில் அண்மையில் கவனம் பெற்றுள்ளது என்றார். குறிப்பாக, நகர்ப்புறங்களில் தீயால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க திட்டமிடுவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். குடியிருப்பு, வணிக வளாகம், ஊரகம், நகர்ப்புறம், வனங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பலவகையில் ஏற்படும் தீவிபத்துகள், வித்தியாசமான சவால்களை உருவாக்குவதாகவும், இதற்கு, தனித்தனியான உத்திகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இதற்குப் போதிய பயிற்சி தேவைப்படுகிறது என்றும், தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு மிகச்சரியாக செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முக்கியமான அடிப்படைக் கட்டமைப்புகள், அங்காடி வளாகங்கள், வணிக வளாகங்கள், அரசுக் கட்டடங்கள் என அனைத்திலும் முறையான தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமரின் முதன்மைச் செயலாளர், முன்கூட்டியே தீ தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தருவதும் அவசியம் என்றார்.
குறிப்பாக, இந்த நடைமுறை பெரு நகரங்களுக்குப் பொருத்தமானது என்று குறிப்பிட்ட அவர், பல மாணவர்கள் உயிரிழக்கக் காரணமான சூரத் வணிக வளாகப் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து போன்ற சம்பங்களைத் தடுப்பதற்கு நகராட்சி சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றார்.
மேற்கத்திய நாடுகளில் எந்தப் பேரிடர் அல்லது அவசர நிலைக்கும் தீயணைப்பு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை அவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். எந்தவொரு பேரிடர் அல்லது அவசர நிலையாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தீயணைப்பு சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தீயிலிருந்து பாதுகாப்பு என்பதை அனைவரின் கருத்தாக உருவாக்குவதற்கு சமூக அளவில் விழிப்புணர்வு முகாம்களையும், ஒத்திகைகளையும் தொடர்ச்சியாக நடத்தலாம் என்றும் அவர் யோசனை கூறினார்.
2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தீயணைப்பு சேவைகளுக்கான தேசிய விதிமுறைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, மேம்படுத்த தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக ‘அனைவருக்கும் தீயிலிருந்து பாதுகாப்பு’ என்பதை நோக்கி பாடுபட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.