பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா காற்று மாசு பிரச்சனையை சமாளிக்க பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய மாநில அதிகாரிகளுடன் இன்று மாலை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். காற்று மாசு பிரச்சனை தேசிய தலைநகர் பகுதியில் அவசரமானதொரு நிலைமைக்கு இட்டுச் செல்லும்வகையில் காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
அறுவடைக்குப் பின்பு மீதமுள்ள தட்டைகளை எரிப்பது, கட்டுமான நடவடிக்கைகள், கழிவுப் பொருட்களை எரிப்பது, வாகனங்களினால் ஏற்படும் மாசு ஆகியவற்றால் உருவாகியுள்ள சூழலை இக்கூட்டம் பரிசீலனை செய்தது. அன்றாடம் இந்த மாநிலங்களுடன் இணைந்து அமைச்சரவை செயலாளர் திரு. ராஜிவ் குவாபா கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 24 X 7 அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள நிலைமையை கண்காணிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நிலவி வரும் மிக மோசமான தட்பவெட்ப நிலைமைகளின் விளைவாக அருகமை மாநிலங்களில் தீவிபத்துகள், தூசி அளவுகள் அதிகரிப்பது ஆகியவற்றை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்த மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிலைமையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வழங்குமாறு இந்த மாநில தலைமைச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு குறித்த சவாலை சமாளிக்க களத்தில் சுமார் 300 குழுக்கள் இறக்கிவிடப் பட்டுள்ளன. தேசிய தலைநகர் பகுதியில் உள்ள ஏழு தொழில் மையங்கள், முக்கிய போக்குவரத்துப் பாதைகள் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதே போன்ற ஏற்பாடுகள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்குத் தேவையான கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்றைய கூட்டம் 2019 அக்டோபர் 24 அன்று பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டமாகும். விரைவில் உரிய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநிலங்கள் உறுதியளித்தன. 2019 அக்டோபர் 4 அன்று அமைச்சரவை செயலாளர் நடத்திய உயர்மட்ட பரிசீலனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த மாசுப் பிரச்சனையை சமாளிக்கத் தேவையான தயாரிப்புகளுக்கு என மத்திய அரசு தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரின் முதன்மை ஆலோசகர் திரு. பி.கே. சின்ஹா, அமைச்சரவை செயலாளர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கான செயலாளர், விவசாயத் துறை செயலாளர், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், இந்திய தட்பவெப்ப துறையின் தலைமை இயக்குநர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.