பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் காற்று மாசு பிரச்சினையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். இந்த மாநிலங்களில் புதிய தீ விபத்து மற்றும் பயிர்த்தாள்களுக்கு தீ வைப்பதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட புதிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் மிஸ்ரா கேட்டுக் கொண்டார்.
பல்வேறு மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மூலமாக நிலைமையை தாம் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், அதிக பிரச்சினை ஏற்படக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்தார். காற்று மாசு தடுப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு சட்டம் 1981-ஐ மீறியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு உரிய அபராதம் விதிப்பதன் மூலம் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
ஹரியானா மாநிலத்தில் பயிர்த்தாள்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களை, கூடிய சீக்கிரத்தில், குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொடர்புடைய அனைவருக்கும் முதல்வர் அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக அந்த மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
டெல்லியில் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். மாசு அதிகரிக்க வாய்ப்புள்ள இடங்கள், வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, நிலைமையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார். நகரில் திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அதிகபட்ச அபராதம் விதித்து வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த சில தினங்களுக்கு சாதகமான வானிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேவையைப் பொருத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். உடனடி செயல்பாட்டுக்கான நடைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய அனைவரும் நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, நீண்டகால, நிரந்தரத் தீர்வுக்கான ஒரு நடைமுறை அமல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. பி.கே. சின்ஹா, அமைச்சரவைச் செயலாளர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் செயலாளர், வேளாண்மைத் துறை செயலாளர், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லி மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோருடன் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.