நாட்டின் பழங்குடியின மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதிலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிப்பதிலும் பிரதமர் முன்னணியில் உள்ளார். தேசிய அளவில் பழங்குடியினரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, "ஆடி மஹோத்சவ்", மெகா தேசிய பழங்குடியினர் திருவிழாவை பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.
ஆடி மஹோத்சவ் என்பது பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் திருவிழாவாகும். இது, பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் (TRIFED) அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் முயற்சியாகும். இந்த ஆண்டு, பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியம் வெளிப்படுத்தப்படும். இந்த மஹோத்சவில் சுமார் 1000 பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்பார்கள். 2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படுவதால், கைவினைப் பொருட்கள், கைத்தறி, மண்பாண்டங்கள், நகைகள் போன்ற வழக்கமான ஈர்ப்புகளுடன், “ஸ்ரீ அன்னை” என்று கூறப்படும் பழங்குடியினரால் பயரிடப்படும் தானியங்களை காட்சிப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.