பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் குடியரசின் அதிபர் மேதகு திரு இம்மானுவேல் மேக்ரானுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் சமீபகால நிலவரங்கள் உள்ளிட்ட பிராந்திய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தார்கள். இதன் காரணமாக தீவிரவாதம், போதைப் பொருள்கள், சட்டவிரோத ஆயுதங்கள், மனிதக் கடத்தல் போன்ற செயல்கள் பரவக்கூடும் என்ற தங்களது கருத்தை வெளிப்படுத்திய அவர்கள், மனித உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.
இந்திய - பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் இருதரப்பு நடவடிக்கைகளையும், இந்தப் பகுதியில் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக இந்திய - பிரான்ஸ் கூட்டணி அளித்துவரும் முக்கியமான பங்களிப்பையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளும் போற்றும் இந்திய- பிரான்ஸ் கேந்திரக் கூட்டணியின் நலனிற்காக இரு நாடுகளும் தொடர்ந்து நெருங்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.