பிரதமர் திரு நரேந்திர மோடி உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூருக்கு நாளை செல்கிறார். தமது பயணத்தின்போது, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர், தீன்தயாள் உபாத்யாயா விவசாயிகள் நலத் திட்டத்தின் தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான காசோலைகளையும் வழங்குகிறார்.
கூட்டுறவு, வேளாண்மை மற்றும் இவை சார்ந்த துறைகளுக்கு உத்வேகம் அளிப்பதன் வாயிலாக உத்ராகண்டின் ஊரகப் பொருளாதாரத்தை பெரிய அளவில் மேம்படுத்துவதே ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தின் இலக்காகும். வேளாண்மை மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு போதுமான உதவிகள் அளித்து, உத்ராகண்டின் மலைப் பகுதியிலிருந்து கட்டாயமாக இடம்பெயர்வதை தடுக்க இத்திட்டம் உதவும். இத்திட்டத்தின் முதல் தவணை நிதியான ரூ.100 கோடிக்கான காசோலையை பிரதமர் உத்ராகண்ட் மாநில முதல்வரிடம் அளிப்பார். இந்த நிதி தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் இருந்து மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது.
தீன் தயாள் உபாத்யாயா விவசாயிகள் நலத்திட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளையும் பிரதமர் வழங்கவுள்ளார். மாநில அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் மிகக்குறைந்த வட்டி விகிதமான 2 விழுக்காட்டில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பல்-பயன் கடனுதவி, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 2022-ல் இம்மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கும் இலக்கில் இத்திட்டம் முக்கிய மைல்கல்லாகும்.
பிரதமர் இதற்கு முன்பு 2018 நவம்பர் 7 ஆம் தேதியன்று, இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக உத்ராகண்டிற்கு வந்தார். 2018 அக்டோபர் 7 அன்று “உத்ராகண்ட்: முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு – 2018”-ல் உரையாற்றுவதற்காக டேராடூனுக்கு வருகை தந்தார்.