பிரதமர் திரு நரேந்திர மோடி, பிகாருக்கு நாளை (17.02.2019) வருகை தருகிறார். பரவுனிக்கு வந்து சேரும் அவர், பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இந்தத் திட்டங்கள் நகரங்களுக்கு இடையே, குறிப்பாக பாட்னா நகரத்திற்கும் அருகே உள்ள பகுதிகளுக்கும், இணைப்பை ஏற்படுத்தும். இவை குறிப்பிடத்தக்க அளவில் நகரிலும் அப்பகுதியிலும் எரிசக்தி இருப்பை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் உர உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் பிகாரில் மருத்துவ, மற்றும் துப்புரவு வசதிகளையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.
பிரிவு வாரியாக இந்தத் திட்டங்களின் விவரம் வருமாறு:
நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு:
பிரதமர், பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத்திட்டம், பாட்னா மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதுடன் எளிதான வாழக்கை முறைக்கும் பயனளிக்கும்.
பாட்னாவில் ஆற்று முகப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணியை அவர் துவக்கி வைக்கிறார்
96.54 கிலோ மீட்டர் தூரத்தினாலான கர்மாலிசாக் கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பார்ஹ், சுல்தான் கஞ்ச் நவ்காச்சியா ஆகிய இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்புடைய பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பல்வேறு பகுதிகளில் 22 அம்ருத் திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ரயில்பாதை:
பிரதமர் பின்வரும் பிரிவுகளில் ரயில்பாதை மின்மய திட்டங்களைத் துவக்கி வைக்கிறார்:
- பரவுனி – குமட்பூர்
- முஸாஃபர்பூர் – ரக்ஸாவுல்
- ஃபதுஹா – இஸ்லாம்பூர்
- பிகார்ஷெரீப் – தனியாவன்
ராஞ்சி – பாட்னா இடையே இயக்கப்படும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாராந்திர விரைவு ரயில் சேவையும் இந்நிகழ்வில் துவக்கி வைக்கப்படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு:
பிரதமர் திரு நரேந்திர மோடி, புல்பூரிலிருந்து பாட்னா வரையிலான ஜகதீஷ்பூர் – வாரணாசி இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தையும்துவக்கி வைக்கிறார். மேலும், பாட்னா நகர எரிவாயு விநியோகத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
9 மில்லியன் மெட்ரிக் டன் ஏ வி யு திறன் கொண்ட பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டத்திற்கும் இந்நிகழ்வில் அடிக்கல் நாட்டப்படுகிறது
பிரதமர், துர்காப்பூரிலிருந்து முஸாஃபர்பூர் மற்றும் பாட்னாவுக்கு, பாரதீப் – ஹால்டியா – துர்காபூர் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏடிஎஃப் ஹைட்ரோ ட்ரீட்டிங் கூடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்
இந்தத் திட்டங்கள் இந்நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிசக்தி கையிருப்பைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்த வகை செய்யும்.
சுகாதாரம்
பிரதமர், சரன், சாப்ரா மற்றும் புர்னியா மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பஹல்பூர், கயா ஆகிய நகரங்களில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உயர்நிலைத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
உரங்கள்
பிரதமர், பரவுனியில் அமோனியா, யூரியா உர உற்பத்தி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பரவுனியிலிருந்து பிரதமர், ஜார்கண்ட் செல்கிறார். அங்கு ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி நகரங்களுக்கு அவர் செல்வார்.