பிரதமர் திரு. நரேந்திர மோடி தமிழ்நாடு புதுச்சேரி உள்பட இரண்டு மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களுக்கு இரு நாள் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும், டாமன் டையூ, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் டாமன் நகருக்கு சனிக்கிழமை செல்கிறார். அங்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பயனாளிகளுக்குப் பல்வேறு திட்டங்களுக்கான சான்றிதழ்களையும் வழங்குகிறார். பின்னர் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
அதையடுத்து பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகை புரிகிறார். சென்னையில் மாநில அரசின் நலத் திட்டங்களில் ஒன்றான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் புதுச்சேரிக்குப் பயணமாகிறார். அங்கு அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்று, மகான் ஸ்ரீ அரவிந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து அங்கு ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் அவர் உரையாடுகிறார். அத்துடன், ஆரோவில்லுக்கும் செல்லும் பிரதமர் ஆரோவில்லின் பொன்விழா நினைவு அஞ்சல் தலையை வெளியிடுகிறார். பின்னர், அங்கு உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில், பிரதமர் குஜராத் மாநிலம் சூரத் நகருக்குச் செல்கிறார். அங்கு புதிய “இந்தியாவுக்கான மராத்தான் ஓட்டத்தை”க் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.