சர்தாரின் பிறந்தநாளான 31 அக்டோபர் 2019 அன்று குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்துகிறார்.
ஒற்றுமை தின அணிவகுப்பிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி, தொழில்நுட்பக் கண்காட்சியைப் பார்வையிடுவதோடு, கெவாடியாவில் குடிமைப் பணிகள் பயிற்சி அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.
2014-லிருந்து அக்டோபர் 31-ந்தேதி தேச ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
27 அக்டோபர் 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில், ஒரே இலட்சியமான “ஒரே இந்தியா உன்னத இந்தியா” என்பதை நோக்கி “ஒற்றுமைக்கான ஓட்டத்தில்” பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நண்பர்களே, 2014ஆம் ஆண்டு தொடங்கி, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் தேச ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நாள், நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியை நமக்கு அளிக்கும் முக்கியமான நாளாகும். அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று, ஒவ்வொரு ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒற்றுமைக்கான ஓட்டம் என்பது, ஒன்றுபட்ட தேசம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இது ஒரே திசையை நோக்கிப் பயணித்து ஒரே இலக்கை எட்ட விரும்புகிறது. அந்த ஒரே இலட்சியம் – ஒரே இந்தியா, உன்னத இந்தியா” என்று அவர் கூறினார்.
“எனதருமை நாட்டுமக்களே, சர்தார் படேல் ஒற்றுமை என்ற இழை கொண்டு நாட்டை இணைத்தார். ஒற்றுமை எனும் இந்த மந்திரம் நமது வாழ்க்கையில் ஒரு நற்பண்பைப் போன்றது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நாம் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு படிநிலையிலும் ஒற்றுமைக்கான இந்த மந்திரத்திற்கு வலு சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எனதருமை நாட்டுமக்களே, நாட்டின் ஒற்றுமை, பரஸ்பர நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வலுசேர்க்க நம்முடைய சமூகம் எப்போதும் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், விழிப்போடும் செயல்பட்டிருக்கிறது. நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்க நீடித்த செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் பற்றிய பல எடுத்துக்காட்டுக்கள் கண்ணுக்குப் புலப்படும்”
“கடந்த ஐந்தாண்டுகளாகவே, தில்லியில் மட்டுமின்றி, இந்தியாவின் பல நகரங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைமையகங்களிலும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வகையில் உள்ள சின்னச்சின்ன நகரங்களிலும்கூட எண்ணற்ற ஆண்கள், பெண்கள், நகரவாசிகள், கிராமவாசிகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் “ஒற்றுமைக்கான ஓட்டத்தில்” பங்கெடுத்து வருகிறார்கள்” என்று பிரதமர் மேலும் கூறினார்.
உடல்தகுதி இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “ஒற்றுமைக்கான ஓட்டம்” என்பது இந்த வகையில் ஒப்பற்றது என்றும் உடல், உள்ளம், உயிர், ஆகியவையும் இதனால் பயனடையும் என்றும் கூறினார். “ஒற்றுமைக்கான ஓட்டம்” என்பது நாம் ஓடுவதற்காக மட்டுமின்றி, உடல்தகுதி இந்தியாவின் உணர்வையும் பிரதிபலிக்கிறது. ஒரே இந்தியா, உன்னத இந்தியா இயக்கத்தில் நாமாகவே இணைந்து கொள்வதை நாம் உணர முடியும்! கூடவே ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்ற நோக்கமும் இதில் கலந்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஓட்டம் உடல் மட்டுமல்லாமல், உள்ளம், நற்பண்புகள் ஆகியவற்றுக்காகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காகவும், இந்தியா புதிய சிகரங்களைத் தொடுவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது” என்றார்.
நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தின் பல்வேறு நிகழ்விடங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள runforunity.gov.in என்ற இணையப்பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.