பாங்காக்கில் இன்று (04.11.2019) நடைபெறும் கிழக்காசியா மற்றும் ஆர்செப் உச்சி மாநாடுகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இது தவிர, பாங்காக்கில் இருந்து இன்றிரவு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ அபே, வியட்நாம் பிரதமர் திரு க்யூன் சுவான் ஃபுக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
பிராந்திய விரிவான பொருளாதார பங்களிப்பு அல்லது ஆர்செப் -இல் இந்தியாவின் பேச்சுவார்த்தைகளை பிரதமர் முன்வைக்கிறார். 10 ஆசிய உறுப்பு நாடுகளுக்கு இடையில் தாராள வர்த்தக ஒப்பந்தமாக ஆர்செப் இருக்கிறது.
ஆர்செப் வர்த்தக ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்று பரவும் கருத்தை நீக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி முயற்சி மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாங்காக் போஸ்ட் -க்கு அவர் அளித்த விரிவான பேட்டியில், தற்போது நடைபெற்று வரும் ஆர்செப் பேச்சுவார்த்தைகளில் விரிவான மற்றும் சமநிலையிலான பயன் கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை மட்டுமே இந்தியா விரும்பும் என்றும் கூறினார்.
நீடித்த உறுதியில்லாத வர்த்தகப் பற்றாக்குறை குறித்த இந்தியாவின் கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டியது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான அளவுக்குப் பயன் கிடைக்கும் வகையில் ஆர்செப் பரஸ்பரம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான் இந்தியா மற்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினருக்கும் பயன்தரும் என்ற கருத்தை பிரதமர் தெரிவித்தார்.
2012ல் கம்போடியாவில் தொடங்கிய ஆர்செப் பேச்சுவார்த்தை, சரக்குகள் மற்றும் சேவைகள், முதலீடு, சந்தை பயன்பாட்டு வசதி, பொருளாதார ஒத்துழைப்பு, அறிவசார் சொத்துரிமை மற்றும் மின்னணு வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.