முதலாவது “விளையாடு இந்தியா” பள்ளி விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை ஜனவரி 31 ஆம் தேதி புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில், தொடங்கி வைக்கிறார்.
விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) என்ற திட்டம் இந்தியாவில் அடிமட்ட அளவில் விளையாட்டுக் கலாசாராத்தை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் நம் நாட்டில் வலுவான விளையாட்டுக் கட்டமைப்பை உருவாக்கவும், இந்தியாவை சிறந்த விளையாட்டு நாடாக உருவாக்கும் நோக்குடன் இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. பள்ளிக்கூட அளவில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பல்வேறு துறைகளிலும் அவர்கள் திறமைகளை வளர்த்தெடுத்து வருங்காலத்தில் அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க உதவவேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவினை கருத்தில் கொண்டு இந்த விளையாடு இந்தியா திட்டம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் மட்ட குழுவினரால் திறமை மிக்க வீரர்கள் கண்டறியப்பட்டு முன்னுரிமை பெற்ற விளையாட்டுத் துறைகளில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வருடாந்திர நிதி உதவியாக ஆண்டிற்கு ரூ 5 லட்சம் வீதம் 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
விளையாடு இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகள் 2018 ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடக்கிறது. 17 வயதுக்குட்பட்ட தடகள விளையாட்டு வீரர்கள் 16 விளையாட்டுத் துறைகளில் பங்கேற்க வருமாறு அழைக்கப்படுகிறார்கள். இந்த துறைகள் வருமாறு- வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபடி, கோ-கோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம்.
இந்த போட்டிகள் இந்தியாவின் இளம் விளையாட்டு திறமைகளை மற்றும் இந்தியாவின் விளையாட்டு ஆற்றலை காட்சிப்படுத்தும் விதமாக அமையும்.
மொத்தம் 199 தங்கப்பதக்கங்கள், 199 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 275 வெண்கலப்பதக்கங்கள் இந்த விளையாடு இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்பட உள்ளன. 17 வயதுக்குட்பட்ட நாட்டின் பிரகாசமான திறமைசாலிகள் இந்த போட்டிகளில் மோத உள்ளனர்.