2018ம் ஆண்டுக்கான உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை 2018 பிப்ரவரி 16ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். நீடித்த வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உள்ள உலகளாவியத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒரு பொது மேடையில் ஒன்றாக கொண்டு வருவதற்கான எரிசக்தி மற்றும் வளங்கள் பயிற்சி நிறுவனமான டெரியின் முன்னோடி அமைப்பே உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சிமாநாடு,
இந்த உச்சி மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் புரி, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சின்ஹா மற்றும் அரசியல் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நெகிழ்திறன் கோளத்திற்கான கூட்டணி என்பதுதான் இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும். பருவ நிலை மாற்ற பின்னணியில் வளரும் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக அவசர சவால்கள் சிலவற்றுக்கு தீர்வு காண்பதற்கான செயல் கட்டமைப்பை உருவாக்க இந்த மாநாடு விரும்புகிறது. நில சீரழிவு, நகரங்களை குப்பைகளற்றதாக ஆக்குவதற்கான சிறந்த திடக்கழிவு நுணுக்கங்கள், காற்று மாசை சிறப்பாக எதிர்த்து போராடுவது, வளங்களையும் எரிசக்தி திறனையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், தூய்மையான எரிசக்திக்கான மாற்றத்திற்கு வசதியேற்படுத்திக் கொடுப்பது, பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள நிதி நுணுக்கங்கள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் ‘கிரீனோவேஷன் கண்காட்சி’ நீடித்த வளர்ச்சி இலக்குகளை எதிர்கொள்வதற்கான சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை எடுத்துக்காட்டும்.
இந்த உச்சிமாநாட்டில் கொள்கை உருவாக்குவோர், ஆராய்ச்சியாளர்கள், சிந்தனாவாதிகள், உலகம் முழுவதிலும் இருந்து தூதரக மற்றும் நிறுவன அதிகாரிகள் உட்பட 2000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலம், காற்று மற்றும் நீரில் தாக்கம் ஏற்படுவதைக் குறைப்பது மற்றும் எரிசக்தி மற்றும் வளங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த மாநாட்டில் சர்வதேச பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர். நீடித்திருப்பது, கரியமில சந்தைகள் மற்றும் விலைகள், நீடித்த போக்குவரத்து, நெகிழ்திறன் நகரங்கள், சூரிய மின்சக்தி மற்றும் குளிர்பதன தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும் நடைபெற உள்ளன. எரிசக்தி மற்றும் வளங்கள் பயிற்சி நிறுவனமான டெரி உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சிமாநாட்டின் 2018 பதிப்பை தில்லியில் பிப்ரவரி 15, 16 மற்றும் 17 தேதிகளில் நடத்துகிறது.