லக்னோவில் 2 நாட்கள் நடைபெறும் உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2018-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார். திரு. ராஜ்நாத் சிங், திருமதி நிர்மலா சீதாராமன், திரு. சுரேஷ் பிரபு, திருமதி ஸ்மிருதி இரானி, திரு. ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷ்வர்தன், திரு. வி கே சிங், திரு. பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள். மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக தனித்தனி அமர்வுகளுக்கு இவர்கள் தலைமை தாங்குவார்கள். பிப்ரவரி 21 அன்று உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நிறைவு விழாவில் பங்கேற்பார்.
மாநிலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளையும், வளங்களையும் காட்டுவதற்காக உத்தரப்பிரதேச அரசு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தில் மேலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அமைச்சர்களை, உலகின் பெரு நிறுவனங்களில் இருந்து தலைவர்களை, மூத்த கொள்கை வகுப்பாளர்களை, சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை, உலகெங்கிலும் இருந்து கல்வியாளர்களையும், ஒருங்கே கொண்டுவர இந்த உச்சிமாநாடு உலக மேடையை கொண்டிருக்கும்.
இந்த மாநாட்டிற்கு ஃபின்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், செக் குடியரசு, தாய்லாந்து, ஸ்லொவேக்கியா, மொரீஷியஸ் ஆகிய ஏழு நாடுகள் பங்குதாரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த உச்சிமாநாட்டின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியை உருவாக்க மாநிலங்கள் தங்களின் வளங்களை வெளிப்படுத்தி, முதலீட்டாளர்களை ஈர்த்து, ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டி கூட்டமைப்பு உணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்ற பிரதமரின் ஊக்கமளிக்கும் அழைப்பின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தமது வாக்குறுதியையும், கடமை நிலையையும் மனதில் கொண்டு இந்த ஆண்டு பிப்ரவரி 4 அன்று குவஹாத்தியில் உலக முதலீட்டாளர்களின் உச்சிமாநாட்டையும், பிப்ரவரி 18 அன்று மேக்னடிக் மகாராஷ்டிரா என்ற பெயரில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்.