உத்தரப்பிரதேசம், வாரணாசியில் நாளை (22.01.2019) நடைபெறவுள்ள 15 ஆவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார்.
முதன்முறையாக இந்த மாநாடு மூன்று நாட்கள் (ஜனவரி 21 முதல் 23 வரை) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கும்பமேளா மற்றும் குடியரசுத் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வசதியாக ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவிருந்த 15 ஆவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு ஜனவரி 21 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு பிறகு ஜனவரி 24 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்பிறகு ஜனவரி 25 ஆம் தேதி தில்லி புறப்படும் பங்கேற்பாளர்கள் ஜனவரி 26, 2019 புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின அணிவகுப்பை கண்டுகளிக்கவுள்ளனர்.
மொரிசீயஸ் நாட்டின் பிரதமர் திரு பிரவீன் ஜக்னாத் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்சு குலாட்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு கன்வல்ஜித் சிங் பக்ஷி கவுரவ விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள்-
ஜனவரி 21, 2019 – வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் தினம். புதிய இந்தியாவின் ஒரு அங்கமாக வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்பு.
ஜனவரி 22, 2019 – மொரிசீயஸ் நாட்டின் பிரதமர் திரு பிரவீன் ஜக்னாத் முன்னிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் துவக்கி வைப்பார்.
ஜனவரி 23, 2019- நிறைவு விழா மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் வழங்குவார்.
இம்மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை நேரங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்:
மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பேயி எடுத்த முடிவின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி 09, 2003 அன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய தினம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த தினம் வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தினர் அரசுடனும், தங்களின் பாரம்பரியத்துடனும் இணைவதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்கிறது. இம்மாநாட்டின் போது இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகிறது.
2017 ஜனவரி 07 முதல் 09 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற 14 ஆவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான உறவை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய பிரதமர் திரு மோடி, இந்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் மாண்புகளின் தூதுவர்களாக விளங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்கள் தங்கள் பங்களிப்புக்கான கௌரவத்தை அடைந்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தினருடன் தொடர்ந்து தனது உறவை தொய்வின்றி தொடர்வதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறினார்.