2020 செப்டம்பர் 18 அன்று பகல் 12 மணியளவில் காணொலி காட்சி மூலம் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பெரும் பாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதைத் தவிர, பயணிகள் வசதிக்கான மற்றும் பிகாரின் நலனுக்கான 12 ரயில் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். கியுல் ஆற்றில் ஒரு புதிய ரயில்வே பாலம், 2 புதிய ரயில் தடங்கள், 5 மின்மயமாக்கல் திட்டங்கள், ஒரு மின்சார எஞ்சின் பணிமனை மற்றும் பர்-பக்தியார்பூர் இடையே மூன்றாவது தடம் ஆகியவை இதில் அடங்கும்.
கோசி ரயில் பெரும் பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது பிகாரின் வரலாற்றிலும், வட கிழக்கை இணைக்கும் ஒட்டு மொத்த பிராந்தியத்திலும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.
நிர்மலி மற்றும் பாப்தியாஹி இடையே 1887-இல் ஒரு மீட்டர்கேஜ் இணைப்பு கட்டமைக்கப்பட்டது. 1934-இல் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் இந்திய-நேபாள நில நடுக்கத்தின் போது இந்த ரயில் தடம் நீரில் அடித்து செல்லப்பட்டது. அதன்பின், கோசி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு, இந்தத் தடத்தை மீட்டமைக்க நீண்ட காலத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2003-04-இன் போது கோசி பெரும் பால திட்டத்துக்கு இந்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலத்தின் கட்டுமான செலவு ரூ 516 கோடி ஆகும். இந்திய-நேபாள எல்லையில் இந்த பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொவிட் பெருந்தொற்றின் போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்போடு இந்தப் பாலத்துக்கன பணிகள் நிறைவுற்றன.
இந்த பாலம் திறக்கப்படுவது இப்பகுதியில் உள்ள மக்களின் 86 ஆண்டு கால கனவை நிறைவேற்றி, காத்திருப்புக்கு முடிவு கட்டும். இந்த பெரும் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, சுபால் நிலையத்தில் இருந்து சஹர்சா-ஆசான்பூர் குபா சோதனை ரயிலையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். தொடர் ரயில் சேவைகள் தொடங்கிய பின்னர், சுபால், அராரிய மற்றும் சஹர்சா மாவட்டங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். இந்தப் பகுதி மக்கள் கொல்கத்தா, தில்லி மற்றும் மும்பை போன்ற நீண்ட தூரத்தில் உள்ள நகரங்களை சென்றடைவதையும் இது எளிதாக்கும்.
ஹாஜிப்பூர்-கோஸ்வார்-வைஷாலி மற்றும் இஸ்லாம்பூர்-நடேஷாரில் இரண்டு புதிய தடங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கர்நவுதி-பக்தியார்பூர் இணைப்பு பைபாஸையும், பர்-பக்தியார்பூர் இடையே மூன்றாவது தடத்தையும் பிரதமர் துவக்கி வைக்கிறார்.
முசாபர்பூர்-சீதமர்ஹி, கதிஹார்-புதிய ஜல்பைகுரி, சமஸ்திபூர்-தர்பங்கா-ஜெய்நகர், சமஸ்திபூர்-காகரியா, பாகல்பூர்-சிவநாராயண்பூர் ஆகிய தடங்களின் மின்மயமாக்கலையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.