நவம்பர் 13 மற்றும் 14-ல் பிரேசில் நாட்டின் பிரேஸிலியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். “புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி” என்பதே இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டின் மையக் கருத்தாகும்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொள்வது இது ஆறாவது முறையாகும். 2014-ஆம் ஆண்டு பிரேஸில் நாட்டின் ஃபோர்ட்டலேசா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் தான் அவர் முதன்முறையாக கலந்து கொண்டார்.
ஐந்து உறுப்பு நாடுகளையும் சேர்ந்த வர்த்தக சமுதாயத்தினர் கலந்து கொள்ளவுள்ள பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள, இந்தியாவிலிருந்து பெருமளவிலான வர்த்தக பிரதிநிதிகள் குழுவினர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் நிறைவு நிகழ்ச்சி மற்றும் 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் தனிப்பட்ட & தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புட்டின் மற்றும் சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, நவநாகரீக உலகில் தேசிய இறையாண்மையை நிலைநாட்டுவதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள், முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் சமுதாயத்தினரின்
பொருளாதார வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்து, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும்.
அதன்பிறகு, பிரிக்ஸ் தலைவர்களுடன், பிரேஸில் நாட்டின் வர்த்தக கவுன்சிலின் தலைவர் மற்றும் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ஆகியோர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த சந்திப்பு முடிந்தவுடன் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்புகளிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.
உச்சிமாநாட்டின் நிறைவாக தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டுப் பிரகடனமும் வெளியிடப்படும்.
உலக மக்கள் தொகையில் 42 சதவீதத்தைக் கொண்ட, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஐந்து முக்கிய நாடுகளை பிரிக்ஸ் ஒருங்கிணைக்கிறது. இந்த நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 23 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், உலக வர்த்தகத்தில் 17 சதவீதத்தை கொண்ட நாடுகளாகவும் உள்ளன.
பிரிக்ஸ் ஒத்துழைப்பு என்பது, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் சந்திப்புகள் மூலம், பரஸ்பர நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது மற்றும் வர்த்தகம், நிதி, சுகாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் சந்திப்பு என்ற இரண்டு முக்கிய தூண்களை கொண்டதாக உள்ளது.