அக்டோபர் 01, 2019 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆரோக்கிய மாந்தன் நிகழ்வின் நிறைவு விழாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். ஆயுஷ்மான் பாரத் பிரதமர் – மக்கள் ஆரோக்கியா திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி தேசிய சுகாதார ஆணையம் ஆரோக்கிய மாந்தன் இரண்டு நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான புதிய அலைபேசி செயலியை பிரதமர் துவக்கி வைக்கிறார். “ஆயுஷ்மான் பாரத் தொடக்கத்திற்கான பெரிய சவால்கள்” பற்றிய விவாதத்தை துவக்கி வைப்பதுடன், நினைவு அஞ்சல் தலை ஒன்றையும் இவ்விழாவில் அவர் வெளியிடுகிறார்.
ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் மக்கள் ஆரோக்கியா திட்டத்தின் பயனாளிகள் சிலருடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட பிரதமர் மக்கள் ஆரோக்கியா திட்டத்தின் அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியையும் அவர் பார்வையிடுகிறார்.
பிரதமர் – மக்கள் ஆரோக்கியா திட்டத்தின் முக்கியமான பங்கேற்பாளர்களை சந்தித்து கடந்த ஓராண்டில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விவாதிப்பதும், இந்தத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்வதும் ஆரோக்கிய மாந்தன் விழாவின் நோக்கமாகும். ஆரோக்கிய மாந்தன் நிகழ்வின் முக்கிய பரிந்துரைகள் இவ்விழாவில் முன்வைக்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் பிரதமர் – மக்கள் ஆரோக்கியா திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி துவக்கி வைத்தார்..