இளம் துடிப்புமிக்க இந்தியா, எந்தவொரு பிரச்சினையையும் காலம் தாழ்த்த விரும்பவில்லை என்பதோடு, பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவே விரும்புவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (28.01.2020) அவர், தேசிய மாணவர் படை பேரணியில் உரையாற்றினார்.
நாட்டில் இளமையான மனநிலை மற்றும் அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருவதை சுட்டிக்காட்டினார்.
“நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையும் நீடித்து வருகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்றும் அவர் வினவினார்.
“3 அல்லது 4 குடும்பங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்பாததோடு, இப்பிரச்சினைக்கு, தீர்வு காணாமலேயே வைத்திருந்தனர்” என்றும் அவர் கூறினார்.
“இதன் விளைவாக, தீவிரவாதம் தொடர்ந்ததால், காஷ்மீர் தொடர்ந்து அழிக்கப்பட்டு வந்ததோடு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்”
“அந்த மாநிலத்தில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அரசு வெறும் பார்வையாளராகவே இருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் சட்டப் பிரிவு 370 பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஒரு தற்காலிக ஏற்பாடாக வைக்கப்பட்டிருந்த இந்த சட்டம் சில அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலுக்காக 70 ஆண்டுகளாக நீடித்தது என்றார்.
“காஷ்மீர் இந்தியாவின் மணிமகுடம் என்றும், குழப்பத்திலிருந்து இப்பகுதியை மீட்க வேண்டியது நமது பொறுப்பு” என்றும் அவர் கூறினார்.
தீவிரவாதத்தை முறியடிக்க துல்லிய தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல்
“நமது அண்டை நாடுகள் நம்முடன் மூன்று முறை போரிட்ட போதிலும், அனைத்து போர்களிலும் நமது படையினர் அதனை முறியடித்து விட்டனர். தற்போது அவர்கள் நம்முடன் மறைமுகப் போரில் ஈடுபடுவதுடன், நமது குடிமக்களும் கொல்லப்படுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் பிரச்சினையில் இதற்கு முன் எத்தகைய சிந்தனை இருந்தது. இதுவொரு சட்டம் & ஒழுங்கு பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது” என்று அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டதுடன், பாதுகாப்புப் படையினர் செயல்படுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்தார்.
“தற்போது இந்தியா இளமையான சிந்தனை மற்றும் மனநிலையோடு முன்னேறிக் கொண்டிருப்பதால், துல்லிய தாக்குதல் மற்றும் விமான தாக்குதல்களையும், தீவிரவாத முகாம்கள் மீது நேரடித் தாக்குதலையும் நடத்த முடிகிறது”
இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக, தற்போது நாட்டில் ஒட்டுமொத்த அமைதி நிலவுவதோடு, தீவிரவாதமும் கணிசமாக குறைந்துள்ளது.
தேசிய போர் நினைவுச் சின்னம்:
நாட்டில் உள்ள சிலர் நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை விரும்பவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
“பாதுகாப்புப் படையினரின் மனஉறுதியை அதிகரிப்பதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளின் பெருமைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
இளம் இந்தியாவின் வாழ்த்துக்களுடன் தற்போது தேசிய போர் நினைவுச் சின்னமும், தேசிய காவலர் நினைவுச் சின்னமும் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி
உலகம் முழுவதும் ஆயுதப்படைகள் மாற்றத்தை சந்தித்து வருவதுடன், ராணுவம், கடற்படை & விமானப்படைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
அந்த வகையில், பல ஆண்டு காலமாக பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி பணியிடம் தேவை என்ற கோரிக்கை இருந்த வந்த போதிலும், துரதிருஷ்டவசமாக முடிவு ஏதும் எடுக்கப்படாமலேயே இருந்ததாக அவர் கூறினார்.
இளமையான சிந்தனை மற்றும் மனநிலை காரணமாக ஏற்பட்ட ஊக்கம் காரணமாகவே பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியை அரசு நியமித்துள்ளது.
“பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி பணியிடத்தை உருவாக்கியதும், புதிய தலைமை தளபதி நியமனத்தை மேற்கொண்டதும், எங்களது அரசுதான்” என்று அவர் தெரிவித்தார்.