அசாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் 18வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார். அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜகதீஷ் முகி, மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, அசாம் முதல்வர் திரு சர்பானந்தா சோனாவால் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில், 2020ம் ஆண்டு படிப்பை முடித்த 1218 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும். இவர்களில் பல்வேறு பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த 48 பேருக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.
இந்த பட்டமளிப்பு விழா, கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடியாகவும், மெய்நிகர் முறையிலும் நடக்கும். பி.எச்.டி பட்டம் பெறுபவர்கள், தங்க பதக்கம் பெறுவோர் மட்டுமே நேரடியாக பட்டங்களைப் பெறுவர். மற்றவர்களுக்கு மெய்நிகர் முறையில் பட்டங்கள் வழங்கப்படும்.