தில்லியில் இன்று பள்ளிச் சிறார்களுடன் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டு குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
தூய்மையின் பயன்கள் குறித்து பிரதமர் கேட்டபோது, நோய்களை தடுத்தல் பற்றியும் தூய்மையான, ஆரோக்கியமான இந்தியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை பற்றியும் மாணவர் குறிப்பிட்டார். கழிப்பறைகள் இல்லாததால் நோய்கள் பரவுவது அதிகரித்து வருவது பற்றியும் ஒரு மாணவர் கூறினார். முன்பெல்லாம் பெரும்பாலான மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்றும், இது பல்வேறு நோய்கள் பரவுவதற்கு வழிவகுத்தது என்றும், இது பெண்களுக்கு மிகவும் பாதகமாக இருந்தது என்றும் திரு மோடி தெரிவித்தார். பள்ளிகளில் மாணவிகளுக்காக தனி கழிப்பறைகள் கட்டப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் இடைநிற்றல் விகிதம் வெகுவாக குறைந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினங்கள் இன்று கொண்டாடப்படுவது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். யோகாவில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து திருப்தி தெரிவித்த திரு மோடி, யோகாசனத்தின் பயன்களையும் எடுத்துரைத்தார். ஒரு சில குழந்தைகளும் பிரதமருக்கு சில ஆசனங்களை செய்து காண்பித்தபோது பலத்த கரவொலி எழுந்தது. நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் குறித்து பிரதமர் விசாரித்தபோது, ஒரு மாணவர் இந்தத் திட்டம் குறித்து விரிவாகக் கூறியதுடன், பெண்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு நிதி ரீதியாக உதவ ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க இது உதவுகிறது என்று கூறினார். பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுக்காக பிரதமரின் செல்வமகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முடியும் என்று விளக்கிய பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் ரூ .1000 டெபாசிட் செய்ய பரிந்துரைத்தார். இது கல்வி மற்றும் பிற்கால வாழ்க்கையில் திருமணத்திற்கு பயன்படுத்தப்படலாம். இதே டெபாசிட் 18 ஆண்டுகளில் ரூ.50,000 ஆக உயரும் என்றும், ரூ.32,000 முதல் ரூ.35,000 வரை வட்டி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவிகளுக்கு 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
தூய்மையை மையமாகக் கொண்ட குழந்தைகளின் படைப்புகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். குஜராத்தில் வறண்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் தங்கள் சமையலறையில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தி அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது குறித்த தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பள்ளிக்கு தாம் வருகை தந்தபோது, பசுமையின் வடிவத்தில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைக் கண்டதாக பிரதமர் கூறினார். உரம் தயாரிக்க கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதன் நன்மைகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்து, இந்த நடைமுறையை வீட்டில் பின்பற்றுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். தங்கள் சமூகத்தில் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு பதிலாக ஒரு துணிப்பையைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார்.
குழந்தைகளுடன் மேலும் உரையாடிய திரு மோடி, காட்சிப் பலகையில் காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியை சுட்டிக்காட்டி, தூய்மை பராமரிக்கப்படுகிறதா இல்லையா என்பதை காந்திஜி கண்காணித்து வருகிறார் என்பதாகக் குழந்தைகளிடம் கூறினார். காந்திஜி தனது வாழ்நாள் முழுவதும் தூய்மைக்காக பாடுபட்டார் என்று அவர் கூறினார். சுதந்திரம், தூய்மை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை காந்திஜிக்கு வழங்கப்பட்டபோது, காந்திஜி சுதந்திரத்திற்கு பதிலாக தூய்மையைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அவர் எல்லாவற்றையும் விட தூய்மையை உயர்வாக மதித்தார் என்று திரு மோடி குழந்தைகளிடம் கூறினார். தூய்மை என்பது ஒரு பாடமாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு பழக்கமாக இருக்க வேண்டுமா என்று மாணவர்களிடம் விசாரித்தபோது, தூய்மை என்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும் என்று குழந்தைகள் ஒருமித்த குரலில் பதிலளித்தனர். தூய்மை என்பது தனி நபரின் அல்லது குடும்பத்தின் பொறுப்பு அல்ல என்றும், ஒருவர் உயிருடன் இருக்கும் வரை அது தொடர்ச்சியான ஒரு நடைமுறை என்றும் அவர் குழந்தைகளிடம் எடுத்துரைத்தார். "நான் எனது சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்த மாட்டேன்" என்ற கொள்கையை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் தெரிவித்தார். தூய்மை குறித்து குழந்தைகளை உறுதிமொழி எடுக்கச் செய்தார் பிரதமர்.
Click here to read full text speech
Marking #10YearsOfSwachhBharat with India's Yuva Shakti! Have a look... pic.twitter.com/PYKopNeBoM
— Narendra Modi (@narendramodi) October 2, 2024