கொரிய குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு யூன் சுக்-யோல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அண்மையில் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற யூனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா-கொரியா சிறப்பு உத்தி கூட்டாண்மை, குறிப்பாக நடப்பு உலகச் சூழலில் மேலும் ஆழமாக விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். இதற்காக சேர்ந்து பணியாற்றுவது என அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையே ராஜாங்க உறவுகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதனை கூட்டாகக் கொண்டாடுவது குறித்தும் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு விரைவில் வசதியான நேரத்தில் வருகை தருமாறு யூனுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.