பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு போரிஸ் ஜான்சன் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர்.
ஜனநாயகம், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, வலுவான ஒத்துழைப்பு மற்றும் வளரும் கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் யுக்திசார்ந்த ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்ளும் இந்தியாவும் இங்கிலாந்தும் நீண்டகால நட்புறவை பேணி வருகின்றன.
இருதரப்பு உறவை விரிவான யுக்திசார்ந்த கூட்டாக முன்னேற்ற லட்சியமிக்க ‘ரோட்மேப் 2030’ உச்சி மாநாட்டில் வகுக்கப்பட்டது. மக்களுக்கிடையேயான உறவு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் அடுத்த 10 வருடங்களில் ஆழமான மற்றும் வலுவான கூட்டு நடவடிக்கைகளுக்கு இது வழிவகுக்கும்.
கொவிட்-19 நிலைமை குறித்து விவாதித்த இரு தலைவர்களும், பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இரு நாடுகளுக்கிடையேயான தற்போதைய ஒத்துழைப்பையும், தடுப்பு மருந்துகளில் உள்ள வெற்றிகரமான ஒத்துழைப்பையும் குறிப்பிட்டனர். இந்தியாவில் தீவிர கொவிட்-19 இரண்டாம் அலைக்கிடையே இங்கிலாந்து அளித்த மருத்துவ உதவிக்காக பிரதமர் ஜான்சனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
மருந்துகளையும், தடுப்பூசிகளையும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த வருடம் இந்தியா வழங்கியதை பிரதமர் திரு ஜான்சன் பாராட்டினார்.
உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதாரங்களுக்கிடையேயான வர்த்தக சாத்தியக்கூறுகளை அடைவதற்காக மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டை இரு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர்.
2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டின் ஒரு பகுதியாக, விரிவான மற்றும் சமமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கான வழிமுறையை உருவாக்க இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒத்துக் கொண்டன. பலன்களை விரைந்து அடைவதற்கான இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டின் மூலம் இரு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கூட்டுகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கூட்டாளியாக இங்கிலாந்து உள்ளது. ஆப்பிரிக்கா தொடங்கி குறிப்பிட்ட வளரும் நாடுகளுக்கு இந்தியாவின் புதுமைகளை பகிர்வதற்கான இந்தியா-இங்கிலாந்துக்கிடையேயான புதிய ‘சர்வதேச புதுமை கூட்டு’, உச்சி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் மற்றும் ஐசிடி பொருட்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், விநியோக சங்கிலியை உறுதிப்படுத்தவும் இருதரப்பும் ஒத்துக்கொண்டன. கடல்சார் கூட்டு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சைபர் தளம் ஆகியவை உள்ளிட்ட ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இருதரப்பும் ஒத்துக்கொண்டன.
இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பு மற்றும் ஜி7 உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை இரு பிரதமர்களும் பகிர்ந்து கொண்டனர். பாரிஸ் ஒப்பந்தத்தின் லட்சியங்களை அடையவும், இங்கிலாந்தால் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் காப்26-ல் நெருங்கி பணியாற்றவும் இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.
இரு நாடுகளின் மாணவர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்கள் நாடு விட்டு நாடு செல்லுதல் மற்றும் போக்குவரத்து தொடர்பான விரிவான கூட்டை இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடங்கின.
நிலைமை சீரடைந்த பின் பிரதமர் ஜான்சனின் இந்திய வருகையை தாம் எதிர்நோக்குவதாக பிரதமர் தெரிவித்தார். ஜி-7 உச்சி மாநாட்டுக்காக இந்திலாந்து வருமாறு பிரதமர் திரு மோடிக்கு பிரதமர் திரு ஜான்சன் அழைப்பு விடுத்தார்.