புதிய தசாப்தத்தின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில், ‘ககன்யான்’ திட்டம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி விவாதித்தார்.
2022-ல் இந்தியா 75-வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் நிலையில், “‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் இந்தியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவது என்ற உறுதிமொழியை” நாடு நிறைவேற்றவிருக்கிறது.
“21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ககன்யான் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக இருக்கும். புதிய இந்தியாவுக்கு இது ஒரு மைல்கல் என்பதும் நிரூபிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கான விண்வெளி வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, ரஷ்யாவில் பயிற்சி மேற்கொள்ளவிருக்கும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த நான்கு விமானிகளைப் பிரதமர் பாராட்டினார்.
“எதிர்கால வெற்றியின் நம்பிக்கையான இந்த இளைஞர்கள், இந்தியாவின் திறன், திறமை, ஆற்றல், துணிவு, கனவுகள் ஆகியவற்றின் அடையாளங்களாவர். நமது நான்கு நண்பர்களும், அடுத்த சில நாட்களில் பயிற்சிக்காக ரஷ்யா செல்லவிருக்கிறார்கள்.. இது இந்தியா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்புக்கு மேலும் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதும் என்று நான் நம்புகிறேன்”.
ஓராண்டு பயிற்சிக்குப்பின், தேசத்தின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் விண்வெளிக்கு சுமந்து செல்லும் பொறுப்பு இவர்களுடையதாகும் என்று பிரதமர் கூறினார்.
“சுதந்திர தின நன்னாளில் இந்த நான்கு இளைஞர்களையும் இந்தத் திட்டத்துடன் இணைந்துள்ள இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் நான் பாராட்டுகிறேன்” என்று அவர் கூறினார்.