2019 செப்டம்பர் 21 முதல் 27 வரை நான் அமெரிக்காவில் பயணம் செய்கிறேன். நான் ஹூஸ்டனுக்கு செல்லவிருக்கிறேன். அதன்பிறகு, ஐநா பொதுச்சபையின் 74 ஆவது அமர்வின் உயர்நிலைப் பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்லவிருக்கிறேன்.
ஹூஸ்டனில், இந்தியா-அமெரிக்கா இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு அமெரிக்காவில் உள்ள முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் நான் கலந்துரையாடவிருக்கிறேன். இருதரப்புக்கும் பயனுள்ள ஒத்துழைப்பில் புதிய துறையாக எரிசக்தி உருவாகி வருவதோடு, இருதரப்பு உறவின் முக்கிய முகமாகவும் இது மாறிவருகிறது.
ஹூஸ்டனில் இந்திய-அமெரிக்க சமூகத்தினரை சந்திப்பதையும், உரையாற்றுவதையும் நான் எதிர்நோக்கியிருக்கிறேன். பல துறைகளில் அவர்களின் வெற்றி உள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நிலைகளில் அவர்களின் பங்களிப்பும் உள்ளது. இந்தியாவுடன் அவர்களுக்குள்ள வலுவான பிணைப்பும், இருபெரும் ஜனநாயகங்களுக்கிடையே பாலமாக வாழும் அவர்களின் பங்களிப்பும் நமக்குப் பெருமைக்குரியதாகும். இந்திய சமூகத்தினரிடையே நான் உரையாற்றும் போது, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் என்னுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். இந்திய சமூகத்தினர் எனக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய கவுரவமும் ஆகும். இந்திய சமூகத்தினர் நிகழ்வில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது இது முதன்முறையாக இருக்கலாம். ஆனால், அவர்களை சென்றடைவதில் புதிய மைல்கல்லாக இது விளங்குகிறது.
ஹூஸ்டனில் இருக்கும் போது, இந்திய-அமெரிக்க சமூகத்தினரின் பல்வேறு குழுக்கள் மற்றும் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன்.
நியூயார்க்கில் ஐநா-வின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் நான் பங்கேற்கவுள்ளேன். 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐநாவின் நிறுவக உறுப்பினராகப் பங்கேற்பது தொடங்கி, அமைதி மற்றும் பாதுகாப்பின் முன்னேற்றத்திற்காகவும் அனைவரையும் உள்ளடக்கிய விரிவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் உலகில் வளர்ச்சி காண்பதற்காகவும் இந்தியா ஊசலாட்டம் இல்லாத உறுதிப்பாட்டைக் காண்பித்து வருகிறது.
இந்த ஆண்டு ஐநா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தின் மையப்பொருள், “வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, பருவநிலைக்கான செயல்பாடு, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றுக்குப் பலதரப்பு முயற்சிகளை செயலாக்குதல்” என்பதாகும். உலகப்பொருளாதார மந்தநிலை, உலகின் பல பகுதிகளில் கொந்தளிப்பு, பதற்றம், பயங்கரவாத அதிகரிப்பு மற்றும் பரவுதல், பருவநிலை மாற்றம், உலக அளவில் பரவிவரும் வறுமையின் சவால் போன்றவை சர்வதேச சமூகத்தை அழுத்தும் பிரச்சினைகளாக உள்ளன. அவற்றுக்கு வலுவான, உலகளாவிய உறுதிப்பாடும், கூட்டான பலதரப்பு செயல்திட்டமும் தேவைப்படுகிறது. பொறுப்புணர்வுமிக்க, தீவிரத் தன்மை வாய்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தப்பட்ட பலதரப்பு ஒத்துழைப்புக்கான நமது உறுதிப்பாட்டை நான் வலியுறுத்துவேன். இதில் இந்தியா தனது பங்களிப்பை செய்துள்ளது.
ஐநா நிகழ்வுகளில் எனது பங்கேற்பின் மூலம் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றி வெற்றி பெற்றிருப்பதை நான் எடுத்துக்காட்டுவேன். செப்டம்பர் 23 அன்று நடைபெறவுள்ள பருவநிலை செயல்பாட்டு உச்சிமாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக இலக்குகளோடு இந்தியாவின் இணைந்த செயல்பாட்டையும், நமது சர்வதேச கடமைப்பொறுப்பையும் நான் முன்னிலைப்படுத்துவேன்.
அதேபோல், அனைவருக்கும் சுகாதாரம் பற்றிய ஐநா நிகழ்வின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட பல முன்முயற்சிகள் வழியாக தேவைப்படும் மக்களுக்கு சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் இந்தியாவின் சாதனைகளை உலக அரங்கில் பகிர்ந்து கொள்வதற்கான தருணத்தையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டினைக் கொண்டாடுவதற்கு ஐநாவில் ஒருநிகழ்வையும் இந்தியா நடத்துகிறது. இதில் காந்திய சிந்தனைகளும், மாண்புகளும் இன்றைய உலகிற்கும் தொடர்ந்து பொருத்தமாக இருப்பது சுட்டிக்காட்டப்படும். காந்தி அவர்களுக்குக் கூட்டாக நடத்தும் புகழாரம் நிகழ்வில் ஐநா தலைமைச் செயலாளருடன் பல்வேறு அரசு மற்றும் ஆட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். மேற்குறிப்பிட்டவை இந்தியாவில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்.
ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கிடையே பிற நாடுகள் மற்றும் ஐநா அமைப்புகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புக்களை நான் நடத்தவுள்ளேன். ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கிடையே முதன்முறையாக பசிபிக் தீவு நாடுகள் கேரிகோம் தலைவர்கள் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருடன் இந்தியா கலந்துரையாடவிருக்கிறது. இது வளரும் நாடுகளுடன் நமது துடிப்புமிக்க ஒத்துழைப்பு மற்றும் அவர்களுடன் பங்கேற்பதை முன்னெடுத்துச் செல்லும்.
ஒருசில நாட்களுக்குள்ளாகவே ஹூஸ்டனிலும், நியூயார்க்கிலும் அதிபர் டிரம்பின் சந்திப்பை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். இருநாடுகள் மற்றும் மக்களுக்கு மேலும் கூடுதலாக நன்மைகளைக் கொண்டு வரும் நோக்கத்துடன் நாங்கள் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்யவுள்ளோம். கல்வி, திறன்கள், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பங்களிப்புக்கு வளமான வாய்ப்புகளுடன் நமது தேசத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது அமெரிக்காவாகும். மேலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசப்பாதுகாப்புக்கும் அது உதவுகிறது. சிறந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல், பலவகையான நலன்கள் ஆகியவற்றை பலப்படுத்துவது உலகின் பழமையான மற்றும் விரிவான ஜனநாயகங்களுக்கு இடையே இயற்கையான ஒத்துழைப்புக்கு அடித்தளம் அமைக்கும். இணைந்து பணியாற்றுவதன்மூலம், கூடுதல் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு, நீடித்த மற்றும் வளமான உலகத்தைக் கட்டமைப்பதற்கு நாம் பங்களிப்பு செய்ய முடியும்.
எனது நியூயார்க் பயணம் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளின் முக்கியமான அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். புளும்பெர்க் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றுவதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும், கூடுதல் ஊக்கத்தோடு பங்களிப்பு செய்ய அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கவுள்ளேன். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை எனக்கு குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்கி கவுரவிக்கவுள்ளது.
எனது பயணம், வாய்ப்புகளின் துடிப்புமிக்க நாடு, நம்பகமான கூட்டாளி மற்றும் உலகத் தலைவராக இந்தியாவை முன்வைக்க உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்காவுடனான நமது உறவுகளுக்குப் புதிய சக்தியை அளிக்கவும் இது உதவும்.