ஹூஸ்டனுக்கு வணக்கம்
டெக்சாஸுக்கு வணக்கம்
அமெரிக்காவுக்கு வணக்கம்
இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள எனதருமை இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்.
நண்பர்களே
இந்தக் காலை நேரத்தில் மிகச் சிறப்பான ஒருவர் நம்முடன் இருக்கிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் புவிக்கோளில் உள்ள அனைவரும் அவரது பெயரை அறிவர்.
உலக அரசியல் மீது நடைபெறும் பெரும்பாலான உரையாடல்களில் அவரது பெயர் இடம் பெறுகிறது. அவரது ஒவ்வொரு வார்த்தையையும் கோடிக்கணக்கானவர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்த மாபெரும் தேசத்தின் உயர் பதவியைப் பெறுவதற்கு முன்பேயும் கூட அவரது பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது.
சிஓ-விலிருந்து தலைமை கமாண்டராக, வீட்டில் இருந்து அதிபர் அலுவலகத்திற்கு, ஸ்டுடியோக்களிலிருந்து உலக அரங்கத்திற்கு, அரசியலிலிருந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு என அனைத்துத் துறைகளிலும் ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
இன்று அவர் நம்மோடு இருக்கிறார். பிரம்மாண்டமான இந்த அரங்கத்திற்கும், பிரம்மாண்டமான பெரும் திரளுக்கும் அவரை வரவேற்பது எனது பெருமையாகவும், கவுரவமாகவும் உள்ளது.
அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் திரு.டொனால்டு டிரம்பை சந்திக்கும் போதும் நட்பையும், இனிமையையும் நான் கண்டிருக்கிறேன்.
இது அசாதாரணமானது, முன்னெப்போதும் காணப்படாதது.
நண்பர்களே
ஏற்கனவே உங்களிடம் நான் தெரிவித்ததைப் போல் சிலமுறை நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறை சந்திப்பிலும் அதே மாதிரியான இனிமை, நட்பு, எளிமை, முழுமையான நகைச்சுவையோடு அவர் காணப்படுவார். நான் அவரை வியப்போடு பார்த்திருக்கிறேன்.
அவரின் தலைமைத்துவ உணர்வு, அமெரிக்காவுக்கான ஆர்வம், அமெரிக்கர்கள் மீது அக்கறை, அமெரிக்க எதிர்காலத்தின் மீது நம்பிக்கை மீண்டும் மகத்தான அமெரிக்காவை உருவாக்கும் எண்ணத்தில் உறுதி ஆகியவற்றை அறிந்திருக்கிறேன்.
அமெரிக்கப் பொருளாதாரத்தை ஏற்கனவே அவர் வலுப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும் அவர் பல சாதனைகளை செய்திருக்கிறார்.
நண்பர்களே,
இந்தியாவில் இருக்கும் நாங்கள் அதிபர் டிரம்புடன் நல்ல தொடர்பைக் கொண்டிருக்கிறோம். வேட்பாளர் டிரம்ப் என்ற வார்த்தைகளுக்குப் பின் ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார் என்ற முழக்கம் தெளிவாக ஓங்கி ஒலித்தது. வெள்ளை மாளிகையில் அவருக்கான விழாவின் போது லட்சக்கணக்கான முகங்களில் மகிழ்ச்சியும், பாராட்டும் சுடர் விட்டன.
முதன் முறையாக அவரை நான் சந்தித்தபோது, “வெள்ளை மாளிகையின் உண்மையான நண்பன் இந்தியா” என்று என்னிடம் கூறினார். இன்று நீங்கள் இங்கே வந்திருப்பது அதற்கு மிகப்பெரிய சான்றாகும்.
கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளின் உறவும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதிபர் அவர்களே, ஹூஸ்டனில் இன்று காலை நடைபெறும் உலகின் இரண்டு பெரிய ஜனநாயகங்களின் விழாவான இதில் மகத்தான பங்களிப்பின் இதயத்துடிப்பை நீங்கள் கேட்கலாம்.
நமது இரண்டு பெரிய தேசங்களுக்கு இடையேயான மனிதப் பிணைப்புகளின் ஆழத்தையும், வலுவையும் நீங்கள் உணரலாம். ஹூஸ்டனிலிருந்து ஐதராபாத் வரை, பாஸ்டனிலிருந்து பெங்களூரு வரை, சிக்காகோவிலிருந்து சிம்லா வரை, லாஸ்ஏஞ்சல்சிலிருந்து லுதியானா வரை, நியூஜெர்சியிலிருந்து புதுதில்லி வரை உள்ள மக்கள் அனைத்து உறவுகளின் இதயமாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது ஞாயிற்றுக்கிழமை பின்னிரவாக உள்ளபோதும் கோடிக்கணக்கானவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும் வெவ்வேறு கால நேரத்தைக் கொண்டிருந்தாலும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் இன்று நம்மோடு இருக்கிறார்கள். வரலாறு படைக்கப்படுவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அதிபர் அவர்களே, 2017-ல் என்னை உங்களின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்தீர்கள். இன்று எனது குடும்பத்திற்கு, நூறு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு, உலகம் முழுவதும் இந்தியப் பாரம்பரியத்துடன் உள்ள மக்களுக்கு உங்களை நான் அறிமுகம் செய்யும் கவுரவத்தைப் பெற்றிருக்கிறேன்.
பெரியோர்களே, தாய்மார்களே, உங்களுக்கு எனது நண்பரை, இந்தியாவின் நண்பரை, மகத்தான அமெரிக்க அதிபர் திரு.டொனால்டு டிரம்பை நான் அறிமுகம் செய்கிறேன்.