வணக்கம்
மாண்புமிகு செயலாளர் அவர்களே,
130 கோடி இந்தியர்கள் சார்பாக ஐ.நா-வின் 74-வது கூட்டத்தில் உரையாற்றுவது எனக்கு அளிக்கப்பட்ட பெரும் கவுரவமாகும்.
இது மிகவும் சிறப்பான தருணமும்கூட. ஏனெனில், ஒட்டுமொத்த உலகமும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடுகிறது.
உலகின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இன்றும்கூட நமக்கு அவரது வாய்மை, அஹிம்சை ஆகிய செய்தி மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
திரு செயலாளர் அவர்களே,
இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய தேர்தல் நடந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் முன்னெப்போதும் இல்லாத உயர் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் எனக்கு வாக்களித்தனர். இதற்கு முன்பு இருந்ததைவிட கூடுதல் பலத்துடன் இரண்டாவது முறையாக எனது அரசு அதிகாரத்திற்கு வந்தது.
மீண்டும் ஒருமுறை உங்கள் முன் இங்கே என்னை நிற்க வைத்துள்ள அந்தத் தீர்ப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இருப்பினும் இந்தத் தீர்ப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததும், விரிவானதும், கூடுதல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் செய்தியாக உள்ளது.
திரு செயலாளர் அவர்களே,
ஒரு வளரும் நாடு, உலகின் மிகப் பெரிய துப்புரவு இயகத்தை வெற்றிகரமாக அமலாக்க முடிந்துள்ளது. அதன் மக்களுக்காக வெறும் ஐந்தாண்டுகளில் 110 மில்லியன் கழிப்பறைகளைக் கட்ட முடிந்துள்ளது. அதன் சாதனைகளும், விளைவுகளும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஊக்கமளிக்கும் செய்தியாகும்.
வளர்ந்து வரும் ஒரு நாடு, உலகின் மிகப் பெரிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு ரூ.5,00,000 வரை 50 கோடி மக்களுக்குக் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகளும், இந்தத் திட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ள பயனும் உலகிற்குப் புதிய பாதையைக் காட்டுகிறது.
வளர்ந்து வரும் ஒரு நாடு, உலகின் மிகப் பெரிய, அனைவரையும் உள்ளடக்கிய நிதித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. வெறும் ஐந்தாண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு 37 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறையின் பயனும் ஒட்டுமொத்த உலகத்திலும் உள்ள ஏழைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் ஒரு நாடு, உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை அதன் குடிமக்களுக்காகத் தொடங்கியுள்ளது. அவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாளத்தைத் தந்துள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்களின் உரிமைகளை உறுதி செய்ய முடியும். ஊழலைத் தடுத்து இருபது பில்லியன் டாலருக்கும் அதிகமாக சேமிக்க முடிந்துள்ளது. நவீன முறையும் அதன் பயனும் உலகத்திற்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.
திரு செயலாளர் அவர்களே,
இங்கே நான் வந்தபோது, இந்தக் கட்டடத்தின் நுழைவு வாயில் சுவரில் ‘ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இனி இல்லை’ என்ற அறிவிப்பை கவனித்தேன். இந்த அவைக்கு நான் ஒரு தகவலைக் கூறவிரும்புகிறேன். உங்களிடையே இன்று நான் உரையாற்றும்போது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து இந்தியாவை விடுவிக்க நாடுமுழுவதும் மிகப் பெரிய பிரச்சார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், தண்ணீர் சேமிப்பை மேம்படுத்துவதற்கு அப்பால், 150 மில்லியன் வீடுகளுக்குக் குடிநீர் விநியோகத்தை நாங்கள் உறுதி செய்யவிருக்கிறோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,25,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக, புதிய சாலைகளை நாங்கள் அமைக்கவிருக்கிறோம்.
2022-ஆம் ஆண்டுவாக்கில் 75-வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும்போது ஏழைகளுக்கு 20 மில்லியன் வீடுகள் கட்டித்தர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
2030-க்குள் காசநோயை ஒழிக்க உலகம் இலக்கு நிர்ணயித்திருந்தபோதும், 2025-க்குள் அதனை ஒழிப்பதற்கு இந்தியா பாடுபட்டு வருகிறது.
இதையெல்லாம் சாதிக்க முடிந்தது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் இவ்வளவு விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வருவது எவ்வாறு?
திரு செயலாளர் அவர்களே,
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தைக் கொண்டது இந்தியா. இந்தக் கலாச்சாரம் தனக்கே உரிய, துடிப்புமிக்க பாரம்பரியத்தைக் கொண்டது. இது அனைவருக்குமான கனவுகளை உள்ளடக்கியது. எங்களின் மாண்புகளும், கலாச்சாரமும் அனைத்து உயிரினங்களிலும் தெய்வீகத்தைக் காண்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய நல்வாழ்வுக்காகப் பாடுபடுகின்றன.
எனவே, எங்கள் அணுகுமுறையின் மையப்பொருள் பொதுமக்கள் பங்கேற்புடன், பொதுமக்கள் நலன் என்பதாக உள்ளது. பொதுமக்கள் நலன் என்பது வெறும் இந்தியாவுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்காக உள்ளது.
கூட்டு முயற்சி, அனைவருக்குமான வளர்ச்சி, ஒவ்வொருவரின் நம்பிக்கையோடு என்ற எங்களின் குறிக்கோளிலிருந்து நாங்கள் ஊக்கத்தைப் பெறுவதும் இதற்குக் காரணம்.
இதுவும்கூட இந்தியாவின் எல்லைகளுக்குள் சுருங்கிவிடவில்லை.
எங்களின் முயற்சிகள், இரக்கத்தின் வெளிப்பாடோ, பாசாங்கோ அல்ல. இவை கடமை உணர்வால், கடமை உணர்வால் மட்டும் உருவானதாகும்.
எங்களின் அனைத்து முயற்சியும் 130 கோடி இந்தியர்களை மையப்படுத்தியதாகும். நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் இந்தக் கனவுகள் ஒட்டுமொத்த உலகத்திலும் உள்ளது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது, ஒவ்வொரு சமூகத்திலும் உள்ளது.
முயற்சிகள் எங்களுடையவை. ஆனால் அவற்றின் பயன்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும்.
எனது இந்தக் கருத்து, ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவைப் போன்றுள்ள நாடுகள், தங்களின் சொந்த வழியில் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வருவதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் நான் கேள்விப்படும்போது, அவர்களின் கனவுகள் பற்றி நான் அறியவரும்போது, எனது நாட்டினை மேலும் வலுவாக, விரைந்து மேம்படுத்தத் தீர்மானிக்கிறேன். இதன் மூலம் இந்தியாவின் அனுபவம் இந்த நாடுகளுக்குப் பயன்படும்.
திரு செயலாளர் அவர்களே,
3,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் மகத்தான புலவர் கணியன்பூங்குன்றனார் உலகின் தொன்மையான தமிழ் மொழியில் எழுதியிருக்கிறார்.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”
இதன் பொருள் அனைத்தும் எங்களது ஊர், அனைவரும் எங்களது உறவினர்.
எல்லைகளைக்கடந்து வாழும் இந்த உணர்வு இந்தியாவிற்கு தனித்தன்மையானது.
கடந்த 5 ஆண்டுகளில், தேசங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் மற்றும் உலக நலன் என்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தை வலுப்படுத்த இந்தியா பாடுபட்டு வருகிறது. உண்மையில் இது ஐ.நா-வின் முக்கிய நோக்கங்களையொட்டியதாகும்.
இந்தியா எழுப்பும் விஷயங்கள், இந்தியா கட்டமைக்க முன்வரும் புதிய உலக மேடைகள், கோருகின்ற கூட்டு முயற்சிகள் ஆகியவை உலகின் முக்கியமான சவால்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கானவை.
திரு செயலாளர் அவர்களே ,
வரலாற்றுபூர்வமான மற்றும் தனிநபர் விகிதப்படியான கரியமிலவாயு வெளியேற்றத்தை நீங்கள் பார்த்தால், புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானதாகும்.
இருப்பினும், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
ஒரு பக்கம் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி இலக்கை எட்டும் வகையில், நாங்கள் பணியாற்றி வருகிறோம். மறுபக்கம் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை உருவாக்கும் முன்முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்.
புவி வெப்பமயம் அதிகரித்து வருவதற்கான தாக்கங்களில் ஒன்றாக இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கையும், கடுமையும் இருக்கிறது. அதே சமயம், அவை புதிய பகுதிகளிலும், புதிய வடிவங்களிலும் தோன்றுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு “பேரிடர் தடுப்பு அடிப்படைக் கட்டமைப்புக்கான கூட்டமைப்பை” உருவாக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது. இயற்கைச் சீற்றங்களைத் தாக்குப்பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க இந்தக் கூட்டமைப்பு உதவும்.
திரு செயலாளர் அவர்களே,
ஐ.நா. அமைதிகாக்கும் செயல்களில் எந்த நாட்டின் வீரர்களையும்விட இந்திய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் தியாகம் செய்துள்ளனர்.
உலகத்திற்குப் போரினை வழங்காமல் அமைதிக்கான புத்தரின் போதனையைத் தந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.
இதன் காரணமாகவே, எங்களது குரல் பயங்கரவாதத்திற்கு எதிராக, இந்தத் தீமை குறித்து உலகுக்கு எச்சரிப்பதாக, இதன் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாக, கோபமுடையதாக இருக்கிறது.
எந்த ஒரு நாட்டிற்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் மனித குலத்திற்கும் இது மிகப் பெரிய சவால்களில் ஒன்று என நாங்கள் நம்புகிறோம்.
ஐ.நா உருவாவதற்கு அடிப்படையாக இருந்த கோட்பாடுகளை சிதைக்கும் பயங்கரவாதப் பிரச்சினையில் நம்மிடையே ஒற்றுமை ஏற்படுவதில் சுணக்கம் உள்ளது.
இதனால் மனிதகுல நலனுக்காக, பயங்கரவாதத்திற்கு எதிராக, உலகம் ஒன்றுபடுவதும், பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் ஒன்றாக நிற்பதும், முற்றிலும் கட்டாயமானது என நான் உறுதியாக நம்புகிறேன்.
திரு செயலாளர் அவர்களே,
உலகத்தின் முகம் இன்று மாறி வருகிறது.
21-ம் நூற்றாண்டின் நவீன தொழில்நுட்பம், சமூக வாழ்க்கையில், தனிநபர் வாழ்க்கையில், பொருளாதாரத்தில், பாதுகாப்பில், போக்குவரத்துத் தொடர்பில், சர்வதேச உறவுகளில், மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
இத்தகைய சூழலில் பிளவுபட்ட உலகத்தால் ஒருவருக்கும் நன்மை கிடைக்காது. நமது எல்லைகளுக்குள்ளேயே நாம் சுருங்கிவிடும் விருப்பத்தைக் கொண்டிருக்க முடியாது.
இந்தப் புதிய சகாப்தத்தில் பலதரப்பு ஒத்துழைப்புக்கும் ஐ.நா-வுக்கும் புதிய திசையை, சக்தியை நாம் வழங்க வேண்டியுள்ளது.
திரு செயலாளர் அவர்களே,
125 ஆண்டுகளுக்கு முன்னால் மகத்தான ஆன்மீக குரு, சுவாமி விவேகானந்தர், சிக்காகோவில் உலக சமயத்தலைவர்கள் அவையில் உலகிற்கு ஒரு செய்தியை அளித்தார்.
அந்தச் செய்தி இதுதான். “நல்லிணக்கமும், அமைதியும்…… கருத்து வேறுபாடு அல்ல”
இன்றும், சர்வதேச சமூகத்திற்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திலிருந்து தரப்படும் செய்தி அதுவேதான். “நல்லிணக்கமும், அமைதியும்”
உங்களுக்கு மிக்க நன்றி