கொவிட்-19 பிரச்சினை மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்றின் போது மருத்துவர்கள், மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் நாடு முழுவதும் ஆற்றி வரும் விலைமதிப்பில்லா சேவைக்காக அவர்களை பிரதமர் திரு மோடி பாராட்டினார்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தின் போது மருத்துவர்களின் கடின உழைப்பு மற்றும் நாடு கையாண்ட யுக்தி மூலம் தான் கொரோனா வைரஸ் அலையை கட்டுப்படுத்த முடிந்தது என்று பிரதமர் கூறினார்.
தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையை நாடு சந்தித்து வரும் வேளையில், மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் முழு மூச்சுடன் பணிபுரிந்து பல லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.
அத்தியாவசிய மருந்துகள், ஊசி மருந்துகளின் விநியோகம் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய தேவையான பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு சமீபத்தில் எடுத்ததென்று பிரதமர் திரு மோடி கூறினார்.
இவை குறித்து போதுமான வழிகாட்டுதல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து தான் மிகப்பெரிய ஆயுதம் என்று கூறிய பிரதமர், அதிகளவிலான நோயாளிகளை தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொவிட் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வதந்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே மருத்துவர்கள் பரப்ப வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்த கடினமான காலகட்டத்தில் மக்கள் அச்சத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்று கூறிய திரு மோடி, முறையான சிகிச்சையோடு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும் என்றார். அவசர சிகிச்சை தேவைப்படாத இதர நோய்களுக்கு தொலைதூர சேவை மருத்துவ முறையை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பெருந்தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது என்று பிரதமர் கூறினார். இத்தகைய இடங்களில் வசதிகளை மேம்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். மாநகரங்களில் உள்ள கொவிட் மேலாண்மை அனுபவத்துடன் கூடிய மருத்துவர்கள், சேவைகள் குறைவாக உள்ள பகுதிகளில் வழிகாட்டுதல், பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
கொவிட் பெருந்தொற்றை கையாள்வதில் தங்களது அனுபவங்களை மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டனர். பெருந்தொற்றை கையாள்வதில் பிரதமர் திரு மோடியின் தலைமையையும் அவர்கள் பாராட்டினர். சுகாதார உள்கட்டமைப்பை எவ்வாறு அவர்கள் மேம்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
கொவிட் தொற்று இல்லாத நோயாளிகளுக்கான சுகாதார உள்கட்டமைப்பை பராமரிப்பது குறித்து வலியுறுத்திய அவர்கள், மருந்துகளை முறையின்றி பயன்படுத்தக் கூடாது என்று நோயாளிகளிடம் எவ்வாறு அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.
மத்திய சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன், சுகாதார இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால், அமைச்சரவை செயலாளர், மத்திய சுகாதார செயலாளர், மத்திய மருந்துகள் செயலாளர், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய அமைச்சங்கள்/துறைகளின் இதர அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.