இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.
தற்போதைய தடுப்பு மருந்து இருப்பு குறித்தும், அதை அதிகரிக்க செய்வதற்கான திட்டம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்காக தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது. தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து துடிப்புடன் பணியாற்றி வரும் இந்திய அரசு, அதிக உற்பத்தி மையங்கள், நிதியுதவி மற்றும் மூலப்பொருட்களின் விநியோகம் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவி வருகிறது
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 18-44 வயது பிரிவினருக்கான தடுப்பு மருந்து வழங்கல் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். பல மாநிலங்களில் தடுப்பு மருந்து வீணாதல் குறித்து ஆய்வு செய்த பிரதமர், அதிகளவில் தடுப்பு மருந்து வீணாவதாகவும், அதை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தடுப்பு மருந்து வழங்கலை மக்களுக்கு தோழமையானதாக ஆக்குவதற்காக எடுக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
தடுப்பு மருந்து இருப்பு குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவதாகவும், இந்த தகவல்களை மாவட்டங்களுக்கு அனுப்பி மக்களுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ளும் படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வர்த்தகம் & தொழில்கள் அமைச்சர், தகவல் & ஒலிபரப்பு அமைச்சர், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் இதர முக்கிய அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.