மாலத்தீவுகளின் அதிபரின் சிறப்புத் தூதுவரும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருமான டாக்டர் முகம்மது அசீம் இன்று மதியம் பிரதமர் திரு. நர்ரேந்திர மோடியை சந்தித்தார்.
பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் ஆர்வமும் கொண்ட நெருக்கமான அண்டை நாடுகளான இந்தியா மற்றும் மாலத்தீவுகளின் உறவுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மாலத்தீவுகளின் ‘இந்தியா முதல்’ என்ற கொள்கையின் கீழ் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிக்கும் மாலத்தீவுகளின் உறுதிப்பாடு குறித்து சிறப்பு தூதர் வலியுறுத்தினார்.
மாலத்தீவுகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் ஆதரவளிக்கும் நம்பகமான மற்றும் நெருக்கமான அண்டை நாடாக இந்தியா எப்போதும் திகழும் என பிரதமர் உறுதி அளித்தார்.
பிரதமரை மாலத்தீவுகளுக்கு விஜயம் செய்ய அதிபர் யாமீனின் அழைப்பை சிறப்பு தூதர் அசீம் எடுத்துரைத்தார். இந்த அழைப்புக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் உரிய நேரத்தில் வருகை தருவதாக ஒப்புக் கொண்டார்.
பிரதமருக்கு அதிபர் அப்துல்லா யாமீன் தெரிவித்த வாழ்த்துகளை சிறப்பு தூதர் எடுத்துரைக்க அதை மனதார ஏற்பதாக பிரதமர் தெரிவித்தார்.