ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் தலைவர் மாண்புமிகு சார்லஸ் மைக்கேலிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது.
ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றுள்ள திரு மைக்கேலுக்குப் பிரதமர் இனிய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இந்தப் பதவிக்காலம் வெற்றிகரமாக அமையவும் நல்வாழ்த்துக்களைக் கூறினார். திரு மைக்கேல் தலைமையின் கீழ், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்திற்கு இடையே நியூயார்க்கில் திரு மைக்கேலுடன் சந்திப்பு நிகழ்ந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், விரிவான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம், போக்குவரத்துத் தொடர்பில் ஒத்துழைப்பு, க்கான ஐரோப்பிய ஒன்றிய முகமையுடன் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு, ஐரோப்பிய அணுசக்தி ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார்.
அடுத்த ஆண்டு பிரெஸ்ஸல்ஸில் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை நடத்த இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதற்கான தேதிகள் தூதரகங்கள் வழியாக முடிவு செய்யப்படும்.