இந்தியாவில் மிகவும் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்த, வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சரான காலஞ்சென்ற திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் நினைவாக நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்தியாவுக்காக விடா முயற்சியுடன் பணியாற்றிய தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் என்று கூறிய பிரதமர், அவருடைய பொது வாழ்வில் பல்வேறு அம்சங்களை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
சுஷ்மா அவர்களுடன் பணியாற்றியவர்கள் அனைவருமே, அவருடன் நெருக்கமாக உரையாடியதால் அதிர்ஷ்டசாலிகள்.
சுஷ்மாவின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், சுஷ்மா அவர்களுடன் நெருக்கமாக உரையாடியதற்கு வாய்ப்பு கிடைத்தது தங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறினார். “சுஷ்மா அவர்கள் பன்முகத் திறமைகள் கொண்டவர். அவருடன் பணியாற்றிய அனைவருமே, அவர் எத்தகைய ஆளுமை கொண்டவர் என்பதை மிக நெருக்கமாக அறிந்திருக்கிறார்கள்'' என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சவாலை ஏற்றுக் கொள்ள சுஷ்மா அவர்கள் ஒருபோதும் தயங்கியது இல்லை
எந்த சவாலையும் ஏற்றுக் கொள்ள சுஷ்மா ஒருபோதும் தயங்கியது கிடையாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டில் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்தது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “கர்நாடகாவில் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொள்வதற்காக நானும் வெங்கய்ய நாயுடு அவர்களும் சுஷ்மாவை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. முடிவு எப்படி இருக்கும் என்பது தெரிந்தது தான். ஆனால் சவால்களை ஏற்றுக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பவர்களில் ஒருவராக சுஷ்மா இருந்தார்'' என்று கூறினார்.
சுஷ்மா அவர்கள் வல்லமை மிக்க சொற்பொழிவாளர் என்றும், அவருடைய உரைகள் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும், உத்வேகம் தருபவையாகவும் இருந்தன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வெளியுறவு அமைச்சகம் என்பதை நிர்வாக அதிகாரம் கொண்டது என்பதை மாற்றி மக்கள் தொடர்பு கொள்ளும் துறையாக மாற்றினார் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்
எந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றாலும், அந்தத் துறையில் பணிக் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் என்றும் பிரதமர் தெரிவித்தார். “நிர்வாக நடைமுறைகளின்படி தான் வெளியுறவு அமைச்சகத்தை யாரும் கையாள்வார்கள். ஆனால் சுஷ்மா அவர்கள் ஒருபடி முன்னே சென்று, மக்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்த்து, அந்த அமைச்சகத்தை மக்களின் நட்புத் துறையாக மாற்றினார்'' என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில் பாஸ்போர்ட் அலுவலகங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், பாஸ்போர்ட் அலுவலகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருப்பதை பிரதமர் நினைவுபடுத்தினார்.
அதிகமாக வெளியில் தெரியாத திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், சுஷ்மாவின் ஹர்யான்வி (ஹரியானா மக்கள் மத்தியில் உள்ள மொழி) மொழிப் புலமை பற்றிப் பேசினார். “அரசியல்ரீதியில் சரியானவற்றைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சுஷ்மா அவர்கள் வித்தியாசமானவர். தன் மனதில் பட்டதைப் பேசுவதற்குத் தயங்காதவர். உறுதியுடன் அவர் பேசுவார். அவருடைய சிறப்பு இது'' என்று பிரதமர் கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்று பிரதமருக்கே கூட சொல்லக் கூடியவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்
ஐக்கிய நாடுகள் சபையில் தனது முதல் உரையை ஆற்ற வேண்டிய தருணம் பற்றி நினைவுகூர்ந்த பிரதமர், என்ன செய்ய வேண்டும் என்று திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் எப்படி வழிகாட்டினார் என்பதைக் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்ற வேண்டிய உரையை ஒரே இரவில் தயாரிக்க தனக்கு திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் எப்படி உதவியாக இருந்தார் என்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் தடங்களை பன்சூரியிடம் காண்கிறோம்: பிரதமர்
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் தடங்களை பன்சூரியிடம் தாம் காண்பதாகக் கூறிய பிரதமர், சுஷ்மாவின் முயற்சிகளைப் பாராட்டினார்.
காலஞ்சென்ற திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் கணவர் ஸ்வராஜ் கவுஷால் அவர்களுக்கும், மகள் பன்சூரிக்கும் பிரதமர் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.
திரு.அவதேஷானந்த் கிரி மகராஜ், முன்னாள் அமைச்சர், திரு.தினேஷ் திரிவேதி, எம்.பி., திரு.பினாகி மிஸ்ரா, அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வான், எம்.பி.க்கள், திரு.சதீஷ் சந்திர மிஸ்ரா, திரு.ராஜீவ் ரஞ்சன், திரு. திருச்சி சிவா, திரு.நவநீதகிருஷ்ணன், திரு.நம்ம நாகேஸ்வர ராவ், முன்னாள் எம்.பி. திரு.ஷரத் யாதவ், அமைச்சர் திரு.அரவிந்த் சவந்த், எம்.பி.க்கள், திரு.சந்த் குப்தா, திரு.சுக்பீர் சிங் பாதல், திருமிகு அனுப்ரியா படேல், ஆனந்த் சர்மா, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், டாக்டர் கிருஷ்ணகோபால், திரு. ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.