சென்னையில் இன்று (14.01.2020) நடைபெற்ற துக்ளக் தமிழ் இதழின் 50-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் கடந்த 50 ஆண்டுகளில் இந்த இதழ் அடைந்துள்ள ஒப்பற்ற வளர்ச்சியைப் பாராட்டினார். இருப்பினும், இதன் நிறுவனர் சோ ராமாசாமி மறைவுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த இதழ் உண்மைகள், அறிவார்ந்த விவாதங்கள், அங்கதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்றும் பிரதமர் கூறினார்.
தமிழ்நாட்டின் இயல்பூக்கம்
தமிழ்நாட்டின் இயல்பூக்கம் பற்றிக் குறிப்பட்ட பிரதமர், பல நூற்றாண்டுகளாக தேசத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இந்த மாநிலம் திகழ்கிறது என்றார்.
“தமிழ்நாட்டின், தமிழ்மக்களின் இயல்பூக்கம் என்னை வியப்படையச் செய்கிறது பல நூற்றாண்டுகளாக தேசத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இந்த மாநிலம் திகழ்கிறது. இங்கு சமூக சீர்திருத்தத்தோடு பொருளாதார வெற்றி நேர்த்தியாகக் கலந்திருக்கிறது. இந்த பூமி உலகின் தொன்மையான மொழியின் தாயகமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் சபையில் எனது உரையின்போது, தமிழின் சில தொடர்களைக் கூறுகின்ற பெருமையை நான் பெற்றிருந்தேன்” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு பாதுகாப்புத் தளவாட பாதை
மாநிலத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்புத் தளவாட போக்குவரத்துக்கான இரண்டு பாதைகளில் ஒன்றினைத் தமிழ்நாட்டில் அமைப்பது போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.
“கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன் எப்போதும் இல்லாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் தளவாட போக்குவரத்திற்கு இரண்டு பாதைகள் அமைப்பது என்ற முக்கியமான முடிவினை நாங்கள் மேற்கொண்டபோது அவற்றில் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்பைத் தமிழ்நாடு பெற்றது. இந்தப் பாதை அமையும்போது மாநிலத்தில் தொழில்வளர்ச்சி ஏற்படுவதோடு தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்”.
ஜவுளி மற்றும் மீன்வளத்துறைக்கு ஊக்கம்
இம்மாநிலத்தில் ஜவுளித்துறையை நவீனமாக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறினார்.
“தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஜவுளித்துறை முக்கியமான பங்கு வகிக்கிறது. மக்களுக்கு உதவி செய்ய இந்தத் துறையை மத்திய அரசு நவீனமாக்கி வருகிறது. தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இரண்டு பெரிய கைத்தறி தொழில் தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கருவிகள் நவீனமயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”.
மீன்வளத்துறையை ஊக்குவிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக திரு நரேந்திர மோடி கூறினார். தற்போது வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை உள்ளது. இந்தத் துறையை மேலும், துடிப்புள்ளதாக நாங்கள் மாற்றவிருக்கிறோம்.
“தொழில்நுட்பம், நிதியுதவி, மனிதவள மேம்பாடுஆகியவை எங்களின் நோக்கமாக உள்ளது. சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடிப்புப் படகுகளும். டிரான்ஸ்பாண்டர்களும் வழங்கப்பட்டன. நமது மீனவர்கள் கிசான் கடன் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படகுகள் நவீனமயத்திற்கும்கூட உதவி செய்யப்படுகிறது”.
சுற்றுலாவுக்கு ஊக்கம்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொருவரும் இந்தியாவில் உள்ள 15 இடங்களைப் பார்வையிட பிரதமர் வலியுறுத்தினார். சுற்றுலாத்துறைக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் கூறினார். உலகப் பொருளாதார அமைப்பின், பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்தன்மை குறியீட்டு எண்ணில் இந்தியா 34-வது இடத்தைப் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன், 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது, இந்தத் தரவரிசை 65-வது இடத்தில் இருந்ததாக அவர் கூறினார்.
“கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறன். சுற்றுலாவில் இருந்து அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
“மத்திய அரசின் உள்நாட்டு தரிசனம் மற்றும் பிரசாதத் திட்டங்களில் பெருமளவு பயனடைந்திருப்பது தமிழ்நாடு என்பதை அறிய நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். சென்னையிலிருந்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகியவற்றுக்கு கடலோரப் பாதை அமைப்பது சுற்றுலாவுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்”.
புதிய இந்தியா – புதிய தசாப்தம்
“இந்தியா தற்போது புதிய தசாப்தத்தில் நுழையும் நிலையில் இந்திய மக்கள் அதன் வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டுவதோடு, புதிய உச்சங்களுக்கு அதனைக் கொண்டு செல்வார்கள் என்று நான் எப்போதும் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். நமது மகத்தான நாகரீகம் வளமடைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இணக்கத்தையும், பன்முகத்தன்மையையும். சகோதரத்துவத்தையும் இந்தியா கொண்டாடுவதாகும். மற்றொரு காரணம் இந்திய மக்களின் மனஉறுதியும், ஆர்வமுமாகும். ஒன்றை செய்வதென்று இந்திய மக்கள் முடிவு எடுத்துவிட்டால் அவர்களை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று பிரதமர் கூறினார்.
இந்த உணர்வுக்கு ஊடகங்கள் மதிப்பளித்து, அந்த வழியில் செயல்பட அவர் வலியுறுத்தினார்.
“அரசுகளாயினும், ஊடக நிறுவனங்களாயினும் இந்த உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வழியில் நாம் நடைபோடுவோம். ஊடகத்தின் பங்களிப்பைப் பாராட்ட நான் விரும்புகிறேன். தூய்மை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைப்பது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது போன்ற தேசக்கட்டமைப்புக்கான சிறந்த இயக்கத்திற்கு இயன்றது அனைத்தையும் அவை செய்து வருகின்றன. இதே உணர்வு வரும் காலங்களிலும், நீடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
Here is my message at the programme marking 50 years of Thuglak. Paid tributes to the versatile and indomitable Cho, highlighted how the spirit of 130 crore Indians is powering transformations and some of the Centre’s efforts for Tamil Nadu’s progress. https://t.co/6mnUz0wZsO
— Narendra Modi (@narendramodi) January 14, 2020