கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் முதன்மைச் செயலர் திரு.பி.கே.மிஸ்ரா தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஜனவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்திலிருந்து பிரதமர் அலுவலகம், கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இன்றையக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலர், வெளியுறவுச் செயலர், சுகாதாரத்துறை, சிவில் விமானப் போக்குவரத்து, தகவல் ஒலிபரப்புத் துறை, கப்பல் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றின் செயலர்கள், இந்திய விமானநிலைய ஆணையத் தலைவர் எல்லைப் பராமரிப்பு செயலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் பரவிய சீனாவுக்கு அருகில் இருப்பதாலும், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதாலும், இந்தியாவில் அது பரவுவதைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களது பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்தும் அணுகுமுறை பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் தனியார் துறையின் பங்களிப்பை ஏற்படுத்துவது பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்துவது உட்பட, வைரஸ் பாதிக்கும் வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து மருத்துவ வசதியை அதிகரிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தவிர்க்க செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை ஆகியவற்றை அனைத்து அமைச்சகங்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நோவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஓரிடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என நான் முடிவெடுத்துள்ளேன்”, என பிரதமர் திரு.நரேந்திர மோடி ஏற்கனவே தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.